விண்வெளி பயணத்திற்கு தயாரான வீரர்கள்.. 12.02க்கு விண்ணில் பாய்கிறது ‘ஃபால்கன் 9’ ராக்கெட்..
ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி பயணத்திற்கு தயார் நிலையில் உள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ‘அக்ஸியம் - 4’ திட்டத்தை இஸ்ரோ, நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் கூட்டு முயற்சியாக முன்னெடுத்துள்ளன. இதில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், ஹங்கேரி வீரர் திபோர் கபு, போலன்ந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கீ ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட உள்ளனர். நாசா விஞ்ஞானி பெக்கி விட்சன் திட்டத்தை தலைமையேற்று குழுவை வழிநடத்துவார். மற்ற மூன்று பேரும் அவரவர் நாடுகளில் இருந்து முதன்முறையாக விண்வெளி பயணம் மேற்கொள்ளும் வீரர்கள் ஆவர்.
முன்னதாக இந்த ஆக்ஸியம்-4 விண்வெளி பயணத்திட்டம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மே 29, ஜூன் 8 ,10, 11 , 19 மற்றும் ஜூன் 22 தேதிகளில் என 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. மோசமான வானிலை மற்றும் திரவ ஆக்ஸிஜன் கசிவு காரணமாக இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று வானிலை 90% சாதமாக இருப்பதால் திட்டம் சாத்தியமாகியிருக்கிறது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் ‘ஆக்ஸியம் - 4’ திட்டத்தின் கீழ் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு பயணம் மேற்கொள்கின்றனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட் மூலம் விண்ணுக்குச் செல்கின்றனர். இந்திய நேரப்படி நண்பகல் 12.02 மணிக்கு ‘ஃபால்கன் 9’ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இதனையொட்டி ஸ்பேஸ் எக்ஸ்சின் ஃபால்கன் 9 ராக்கெட்டில் வீரர்கள் 4 பேரும் அமர்ந்து விண்வெளி பயணத்திற்கு தயாராக காத்திருக்கின்றனர். விண்வெளி கவச உடையை அணிந்து, வீரர்கள் விண்கலத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை ஸ்பேஸ் எக்ஸ் வெளியிட்டுள்ளது. வீரர்கள் ராக்கெட்டு உள்ளே சென்றதும், ராக்கெட்டின் கதவுகள் மூடப்பட்டு அனைத்து கம்யூனிகேஷன் சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக அறிவித்திருக்கிறது. இவர்கள் 14 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ள நிலையில், இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொள்வார் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


