மீண்டும் கொல்கத்தாவில் கொடூரம்! சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை
கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் வளாகத்திற்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் முன்னாள் மாணவர் மற்றும் ஊழியர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கொல்கத்தாவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அங்குள்ள சட்டக் கல்லூரியில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மனோஜித் மிஸ்ரா ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவரணி தலைவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 பேரின் போன்களை பறிமுதல் செய்து மேற்குவங்க போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் மூன்று குற்றவாளிகளும் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புகாரின்படி, அந்தப் பெண் புதன்கிழமை இரவு 7.30 மணி முதல் இரவு 10.50 மணி வரை தெற்கு கல்கத்தா சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாவலரின் அறைக்குள் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.


