ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி துப்பாக்கியை அடகுவைத்த சப் இன்ஸ்பெக்டர்!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி திருட்டு வழக்கில் பறிமுதல் செய்த நகையை அடகு வைத்ததோடு தனது சர்வீஸ் துப்பாக்கியை கூட அடகு வைத்த சப் இன்ஸ்பெக்டரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராயச்சோட்டியைச் சேர்ந்த பானு பிரகாஷ் ரெட்டி, தெலுங்கானாவில் 2020 பேட்ச்சை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு, அவர் அம்பர்பேட்டை காவல் நிலையத்தில் (துப்பறியும் எஸ்.ஐ.) யாக பணியில் சேர்ந்தார். இருப்பினும், கடந்த சில நாட்களில், அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டார். இதனால் லட்சக்கணக்கான பணத்தை இழந்து கடனில் சிக்கினார். இதன் காரணமாக, அவர் ஒரு திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட 8 சவரன் தங்கத்தை எடுத்து விற்று பணம் பெற்றார். அத்துடன் இல்லாமல் தனது சர்வீஸ் துப்பாக்கியை கூட தனி நபரிடம் வழங்கி பணம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வு எழுதிய பானுபிரகாஷ் ரெட்டிக்கு அதில் வேலை கிடைத்தது. இதனால் அவர் அங்கு பணியில் சேர தற்போது பணியில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து வர காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் சென்று தனது அனைத்து பொருட்களையும் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை கேட்டபோது, அவரது மேசையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை காணவில்லை தோட்டாக்கள் மட்டுமே இருப்பதாகக் கூறினார். மேலும் சி.சி. கேமராக்களை சரிபார்க்கச் சொன்னார்.
அதிகாரிகள் அதை ஆய்வு செய்தபோது, சமீபத்திய வழக்கில் மீட்கப்பட்ட 8 சவரன் தங்கத்தை அவர் எடுத்துச் சென்றிருப்பதைக் கண்டறிந்தனர். இது குறித்து சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரித்தபோது, அதை தனது சொந்த தேவைக்காக அடகு வைத்திருந்ததாக அவர் கூறினார். இதனால் இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். களத்தில் இறங்கிய அதிரடிப்படை போலீசார் பானுபிரகாஷிடம் விசாரித்தனர். இதில் அவர் துப்பாக்கியை கூட அடகு வைத்துள்ளது தெரிய வந்தது. அதிரடிப்படை போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அதிகாரிகள் சப்-இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்துள்ளனர். மிகவும் திறமை கொண்ட எஸ்.ஐ. தனது துறையின் முன்னேற்றத்திற்காக திறமையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, குற்றப் பாதையில் சென்று ஆன்லைன் சூதாட்டத்தால் கடனில் சிக்கி தங்கம், துப்பாக்கியை பணத்திற்காக தனியாரிடம் அடகு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


