ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம்?... ஷாருக்கானின் மேலாளருக்கு சம்மன்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய விவகாரத்தில் ஷாருக்கானின் மேலாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைபி பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 28 நாட்களுக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவர் சிறையில் இருந்த போது ஆரியன் கானை விடுவிக்க 25 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஷாருக்கானின் மேலாளர் பூஜா தத்லானியிடம் பேரம் பேசப்பட்டதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் மும்பை போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
போதை பொருள் கடத்தல் வழக்கில் மிரட்டி பணம் பறிக்கும் விசாரணையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜிலென்ஸ் குழுவினரால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவிடம் பூஜா தத்லானி கூடுதல் அவகாசம் கேட்டுள்ளார்.
போதைப்பொருள் வழக்கில் பொது சாட்சியான பிரபாகர் சாயில் என்பவர் தான் 25 கோடி ரூபாய் பேரம் நடந்ததாக தெரிவித்தார். மற்றொரு முக்கிய சாட்சியான கிரன் கோசவி மற்றும் சாம் டிசோசா ஆகியோரிடம் பூஜா தத்லானி பேரம் பேசியதாக அவர் தெரிவித்திருந்தார். பூஜா தத்லானி அவர்களை சந்தித்து பேசியதற்கான சிசிடிவி காட்சிகளும் கிடைக்கப் பெற்று இருப்பதால் அதனடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.