தெரு நாய்களை காப்பகத்தில் அடைப்பதற்கு எதிரான வழக்கு - தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்..!!

 
supreme court supreme court

டெல்லியில் உள்ள நாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த  உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

தலைநகர் டெல்லியில் உள்ள தெருநாய்களை பிடித்து காப்பகங்களில் அடைக்குமாறு சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நாய்கள் பிடிக்கப்படும் போது விலங்குகள் நல ஆர்வலர்கள் தலையிட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த உத்தரவை நிறுத்தி வைக்க கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் , சந்திப் மேத்தா , அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. அப்போது டெல்லி அரசு சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தெரு நாய் கடிகளால் குழந்தைகள் உயிரிழப்பதாகவும், ஒரே நாளில் பத்தாயிரம் பேர் நாய் கடிக்கு ஆளாவதாக  தெரிவித்தார். 

lot of dog attack

மேலும்  தெரு நாய் கடிகள் காரணமாக 18 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை உயிரிழப்புகள் ஒரு வருடத்தில் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது என்றும் , நாய்கள் கொல்லப்பட வேண்டும் என்று யாரும் கூறவில்லை; ஆனால் மனிதர்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என்றே கூறுகிறோம் எனக் கூறியதோடு இங்கு யாரும் விலங்குகளை வெறுப்பவர்கள் அல்ல என்பதையும் தெரிவித்தார். குறிப்பாக நாய் கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்க கூட முடியாத ஒரு சூழல் உள்ளது என்ற வாதத்தையும் முன்வைத்தார். அரசு தரப்பு வாதத்தை தொடர்ந்து நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிரானவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், முன்பு வழக்கில் நோட்டீஸ் எதுவும் அனுப்பப்படாமலும், உரிய விசாரணை நடத்தப்படாமலும் இது போன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்படக்கூடாது என்றதோடு இந்த உத்தரவினால் தெரு நாய்கள் அப்புறப் படுத்தப்படுகின்றன என்ற வாதத்தை முன் வைத்தார். 

மேலும் காப்பகத்திற்கு நாய்கள் மாற்ற வேண்டும் என்ற உத்தரவு வழங்கப்பட்ட போதிலும் என்ன மாதிரியான காப்பகங்கள்? எவ்வளவு நாய்கள் அந்த காப்பகங்களில் அடைக்கப்பட வேண்டும்? என்பது தொடர்பான விவகாரம் முடிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும், தெரு நாய்கள் விவகாரத்தில் உரிய சட்டம் உள்ளதோடு தெரு தெரு நாய்களுக்கு உரிய கருத்தடை செய்யப்பட்டால் அவற்றின் எண்ணிக்கை பெருகாது என்றதோடு ஏற்கனவே ஊழியர்களால் பிடித்து செல்லப்பட்ட நாய்கள் மீண்டும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தார். மேலும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக இருந்த பல தரப்பு மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர்கள் நாய்கள் பிடித்து வைக்க போதிய இடங்கள் கூட இல்லை என்ற வாதத்தை முன் வைத்தனர். 

dog

அப்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் மேம்போக்கான வாதங்களை நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டாம்! ஆதாரம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். ஆதாரங்கள் இருந்தால் வாதங்களை முன் வையுங்கள் ,நாங்கள் அது குறித்து பரிசீலிக்கிறோம் என்றதோடு டெல்லி அரசு நிலைப்பாடு என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் அரசின் செயல் அற்ற தன்மையால் தான் இந்த நிலை உருவாகியுள்ளது என்றதோடு சட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அமல்படுத்தப்படவில்லை! இதனாலே இந்த பிரச்சனையை உருவாகியுள்ளது என்ற கருத்தையும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்கனவே விதிமுறைகளும் சட்டங்களும் உள்ளது, ஆனால் அவை எதுவும் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றதோடு ஒரு பக்கம் மனிதர்கள் நாய் கடிகளால் துன்பப்படுகிறார்கள். மற்றொரு பக்கம் விலங்கு நல ஆர்வலர்கள் தெரு நாய்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என தெரிவித்ததோடு அனைத்து தரப்பும் எழுத்து பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.