வாடகை தாயாக குழந்தை பெற்று கொடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை! 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை
வாடகை தாயாக குழந்தை பெற்று கொடுக்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததால் தப்பிக்க முயன்று அப்பெண் 9-வது மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ராயதுர்கம் மை ஹோம் பூஜாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராஜேஷ்பாபு (54). இவருக்க குழந்தை இல்லை. இதனால் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற நினைத்தனர். இதற்காக சந்தீப் என்ற இடைத்தரகர் மூலம் ஒடிசாவை சேர்ந்த சஞ்சய் சிங் மற்றும் அஷ்விதா (25) தம்பதியை சந்தித்தனர். அவர்களுடன் செயற்கை முறையில் ராஜேஷ்பாபுக்கு குழந்தை பெற்று கொடுத்தால் ரூ.10 லட்சம் பெற்று தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஒப்பந்தத்தின்படி இருவரும் கடந்த அக்டோபர் 24ம் தேதி நான்கு வயது மகனுடன் ஐதராபாத் வந்தனர். அதன்பிறகு அஷ்விதாவை 9வது மாடியில் உள்ள ராஜேஷ்பாபு குடியிருப்பில் வைத்து கொண்டு அவரது கணவர் சஞ்சய் சிங் 7வது மாடியில் உள்ள வீட்டில் தங்க வைத்துள்ளார்.
ஒருபுறம் செயற்கை முறையில் குழந்தை பெற தேவையான அனுமதிகளை பெறும் பணி நடந்து வரும் நிலையில், கடந்த பதினைந்து நாட்களாக அஸ்விதாவுக்கு ராஜேஷ் பாபு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு அஷ்விதா செயற்கை முறையில் வாடகைத் தாயாக மட்டுமே குழந்தை பெற்று தருவேன். உடலுறவு கொள்ள சம்மதிக்க மாட்டேன் என்று ராஜேஷ்பாபுவிடம் கூறிய அஷ்விதா, தனது கணவரிடம் தவறாக நடந்து கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் ஒடிசாவுக்குத் திரும்பிச் செல்ல இரண்டு , மூன்று முறை சொன்னாலும், ஒப்பந்தத்தின்படி ஒரு குழந்தையைப் பெற்று கொடுத்தால் பணக் கஷ்டங்கள் நீங்கும் என்று சஞ்சய் சிங் தனது மனைவி சமாதானம் செய்து வைத்தார். ஆனால் ராஜேஷ் பாபுவின் பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கவே, அங்கிருந்து தப்பித்து கணவன் மற்றும் மகனுடன் சொந்த ஊருக்கு செல்வது என்ற முடிவுக்கு வந்தாள் அஷ்விதா.
இதற்காக ராஜேஷ் பாபுவின் 9-வது மாடி பிளாட்டின் பால்கனியில் இருந்து சேலையைக் கட்டிக்கொண்டு, அதன் வழியாக இரண்டு தளங்கள் கீழே சென்றால் 7-வது மாடியில் உள்ள சாய்வுதளம் வழியாக தன் கணவரின் பிளாட்டை அடையலாம் என்று திட்டமிட்டார். இதற்காக புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் 9வது மாடியின் பால்கனியில் இருந்து இரண்டு புடவைகள் ஒன்றாகக் கட்டப்பட்டு கீழே தொங்கவிட்டு அந்த புடவைகளை பிடித்துக்கொண்டு மெதுவாக கீழே இறங்க முயன்ற போது கைகள் நழுவி அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த ராயதுர்கம் போலீசார் அஸ்விதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் அளித்த புகாரின் பேரில், ராஜேஷ் பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செயற்கை முறையில் குழந்தை பெறலாம் என்ற போர்வையில் ஏழைக் குடும்பங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைத் தடுக்க அரசு கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர்.