நடிகை சமந்தாவின் விவாகரத்து குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கோரிய அமைச்சர்!
திரைப்பிரபலங்கள் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து குறித்து தான் பேசிய கருத்துக்கு, தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா மன்னிப்புக் கோரினார்.
நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். தற்போது விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், நாக சைதன்யா விரைவில் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இந்த நிலையில் தெலங்கானா பெண் அமைச்சர் கொண்டா சுரேகா, நடிகை சமந்தாவும் - நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ்தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். கே.டி.ராமராவ், நடிகை சமந்தா மீது விருப்பம் கொண்டு கேட்டதாகவும், அதற்கு நாகார்ஜுனாவும் ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் இதற்கு சமந்தா ஒப்புக்கொள்ளவில்லை என்றும், இதனாலேயே அவர் நாக சைதன்யா அக்கினேனியை விவாகரத்து செய்தார் என்றும் பேசியிருக்கிறார்.

அமைச்சர் கொண்டா சுரேகாவின் இந்த பேட்டி வைரலான நிலையில், தெலங்கு திரையுலகினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கனவே நடிகர் நாகார்ஜுனா, சமந்தா, அமலா, நாக சைதன்யா, நடிகர்கள் நானி, ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அதேநேரம் முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ், அமைச்சருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பல்வேறு தரப்பிலுருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தனது கருத்தை திரும்பப்பெற்றுள்ளார் அமைச்சர் கொண்டா சுரேகா.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “என்னுடைய அரசியல் பயணத்தில் அரசியல் ஆதாயத்துக்காக யாருடைய குடும்பப் பிரச்சினை அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியது இல்லை. நான் சமந்தா மற்றும் அவரது குடும்பத்தை இழிவுப்படுத்தவில்லை. நான் எப்போதும் அடிப்படையை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பதில்லை. எனது பேச்சும், கருத்தும் உங்களை புண்படுத்தி இருந்தால், அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களை இழிவுப்படுத்தும் அரசியல் தலைவரை நோக்கி தான் நான் கேள்விகளை எழுப்பி இருந்தேன். சமந்தாவின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் அதனை செய்யவில்லை. நீங்கள் தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் குறித்து நான் அறிவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


