தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- ரூ.5 கோடி பறிமுதல்
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மரிகுடா தாசில்தார் மகேந்தர் ரெட்டி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டுகள் எழுந்த நிலையில் மகேந்தர் ரெட்டியின் வீட்டில் அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் சோதனை நடத்தினர்.

சோதனையில் ஏராளமான பணம், தங்கம் மற்றும் பிற சொத்துகள் இருப்பது அடையாளம் காணப்பட்டன. மேலும் ஒரு இரும்பு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான பணம் கண்டுபிடிக்கப்பட்டது. வெல்டர் உதவியுடன் டிரங்க் பெட்டி திறக்கப்பட்டு பணம் எண்ணும் இயந்திரம் கொண்டு எண்ணப்பட்டதில், அதில் ரூ.2 கோடி இருந்தது.
மகேந்தர் ரெட்டி இதற்கு முன்பு கந்துகூர் தாசில்தாராக பணியாற்றியபோதுலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவரது வீட்டில் பல்வேறு சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியது. இந்நிலையில் மகேந்தர் ரெட்டியின் வீடு, அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் என 15 வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் நேற்று முதல் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை முடிவில் ரூ.4.56 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர 259 கிராம் தங்க நகைகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 15 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் ஒரு வங்கி லாக்கர் இருப்பதும் கண்டறியப்பட்ட நிலையில், அந்த வங்கி லாக்கரை செவ்வாய்க்கிழமை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த தாசில்தாரர் மகேந்தர் ரெட்டியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செர்லப்பள்ளி சிறையில் அடைத்தனர்.


