பாகிஸ்தானுடன் தொடர்பு... பாம் வைத்த முன்னாள் ஏட்டு - லூதியானா பிளாஸ்ட் மாஸ்டர் மைன்ட் ஜெர்மனியில் கைது!

 
லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு

பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானாவில் மாவட்ட நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்ற வளாகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அலுவலகத்தின் அருகே உள்ளது. கடந்த டிசம்பர் 23ஆம் தேதி இந்த நீதிமன்ற வளாகத்தில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. நீதிமன்றத்தின் இரண்டாவது மாடியிலுள்ள கழிவறையில் அன்று மதியம் 12.22 மணியளவில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. இதில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

லூதியானா நீதிமன்ற குண்டுவெடிப்பு

இச்சம்பவம் ஒட்டுமொத்த பஞ்சாப் மாநிலத்தை உலுக்கியுள்ளது. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கக் கூடும் என கூறப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத படைகளால் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறியது இங்கே கவனிக்கத்தக்கது. அதேபோல இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கிறது. மாநிலத்தில் அரசியல் அசாதாரண சூழலை ஏற்படுத்தி தேர்தல் ஆதாயம் தேடவும் இந்த தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டது. 

Image

இச்சம்பவம் நடந்த உடனே தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) 2 பேர் கொண்ட குழு லூதியானாவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டது. அதேபோல பயங்கரவாத தடுப்பு அமைப்புகளும் விசாரணையை தீவிரப்படுத்தின. இச்சூழலில் தற்போது சீக்கிய அமைப்பைச் சேர்ந்த ஜஸ்விந்தர் சிங் முல்தானி என்பவரை ஜெர்மனியில் கைது செய்துள்ளனர். இவர் Sikhs for Justice (SFJ) என்ற அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஆவார். இந்த அமைப்பு அமெரிக்காவிலிருந்து செயல்படுகிறது. இந்தியாவிலிருந்து பஞ்சாப்பை பிரித்து காலிஸ்தான் எனும் தனி நாடு கோரும் அமைப்பாகும். 


முல்தானி பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. பாகிஸ்தானிலிருந்து சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் மேலும் சில வெடிகுண்டுகளை கொண்டு வர முல்தானி சதித்திட்டம் தீட்டியதுடன், நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. மேலும் பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் தலைமை காவலர் ககன்தீப் சிங் தான், நீதிமன்ற வளாகத்தில் குண்டை வைத்ததாகவும், அவர் வைத்த குண்டில் அவரே சிக்கி உயிரிழந்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

India finally bans pro-Khalistan outfit 'Sikhs for Justice' for its  separatist agenda and militant activities

இவருக்கும் ஐஎஸ்ஐ அமைப்புக்கும் தொடர்பில் இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. ககன்தீப் சிங் போதைப்பொருள் கடத்துபவருடன் தொடர்பில் இருந்த காரணத்திற்காக ஏற்கெனவே 2 வருடம் சிறையில் இருந்தவர். கடந்த அக்டோபர் மாதம் பஞ்சாப்பின் தரன் தரன் மாவட்டத்திலுள்ள கெம்கரன் பகுதியில் ஆயுதங்களை கடத்த முற்பட்டதன் பின்னணியில் முல்தானி இருந்ததாகவும் கூறப்படுகிறது. அக். 20-ல் பஞ்சாப் போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை இணைந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் ஒரு பெரிய ஆயுத கிடங்கை கைப்பற்றியது. ஹெராயின், துப்பாக்கிகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டன. இதில் முல்தானி சம்பந்தப்பட்டிருக்கிறார்.