கவுதம் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். 4 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பு கொலை மிரட்டல் விடுத்ததாக கம்பீர் புகார் அளித்துள்ளார். டெல்லி காவல்துறையிடம் கவுதம் கம்பீர் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தனக்கும் தனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.


