4 மாநிலத்தில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி - பிரதமர் மோடி
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து மேற்கண்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. அதன்படி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 165 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் 64 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதேபோல் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக முறையே 116 மற்றும் 55 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க தகுதி பெற்றுள்ளது. தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் மட்டும் காங்கிரஸ் 64 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க தகுதி பெற்றுள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். நல்ல நிர்வாகம், வளர்ச்சி, அரசியல் ஆகியவற்றுக்கு மக்கள் உறுதுணையாக நிற்கின்றனர் என்பதற்கு தேர்தல் முடிவுகள் சாட்சி எனக் கூறியுள்ள அவர், கடந்த சில ஆண்டுகளாக பாஜகவிற்கு வழங்கிய தொடர் ஆதரவிற்கு தெலங்கானா மாநில மக்களுக்கும் நன்றி என்றும், தெலுங்கானா மாநில மக்களுடைய எங்களது பிணைப்பு பிரிக்க முடியாது, அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாஜக மீது அசைக்க முடியாத ஆதரவை வழங்கிய மக்களுக்கு நன்றி, மக்கள் நலனுக்காக தொடர்ந்து அயராது பாடுபடுவோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.