14 நிமிடத்தில் சுத்தம் செய்யப்பட்ட வந்தே பாரத் ரயில்
ஜப்பானின் புல்லட் ரயிலுக்கு இணையான வேகத்தில் 14 நிமிடங்களில் வந்தே பாரத் ரயில் சுத்தம் செய்யப்பட்டது.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் முறையே கோவை மற்றும் நெல்லையில் இருந்து வந்த வந்தே பாரத் ரயில்கள் 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் சோதனை அடிப்படையிலான புதிய முயற்சி இன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியினை தொடங்கி வைத்து ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, “தெற்கு ரயில்வே சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு தூய்மை திட்டத்தின் ஒரு பகுதியாக காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று வந்தே பாரத் ரயிலை 14 நிமிடங்களில் சுத்தம் செய்யும் பணி சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டது. வழக்கமாக ஒரு மணி நேரத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள் அனைத்தும் இந்த 14 நிமிடங்களில் முடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அடுத்த பயணத்திற்கு இந்த ரயில் விரைவாக தயராகியுள்ளது.
மற்ற விரைவு ரயில்கள் அடுத்த பயணத்திற்கு புறப்படுவதற்கு அதிக நேரம் இடைவெளி உள்ளது. ஆனால் வந்தே பாரத் ரயிலுக்கு குறைவான நேர இடைவெளி மட்டுமே உள்ளதால். முதற்கட்டமாக விரைவாக சுத்தம் செய்யும் சோதனை முயற்சி வந்தே பாரத் ரயிலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிக குறைவான நேரத்தில் ரயில்களை சுத்தம் செய்ய வேண்டும் என்பதால் 14 நிமிடங்களில் தூய்மை பணியை முடிக்க வேண்டும் என்பது ரயில்வே அமைச்சகத்தின் வழிகாட்டுதல். அதன் படி முடிக்க முடிகிறதா என்பதனை சோதனை முயற்சியாக மேற்கொண்டு முடித்துள்ளோம்” என தெரிவித்தார்.


