ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 275 தான் - ஒடிசா அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

 
Odisha Train Accident

ஒடிசாவில் நடந்த கோரமான ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

ஒடிசா மாநிலம் பாலசோர்  மாவட்டத்தில் உள்ள பாஹநாகா பஜார் ரயில் நிலையம் அருகே 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 2வது நாளாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவு பெற்றுள்ளது. பொக்லைன் இயந்திரங்கள், கிரேன்கள் மூலம் ரயில்பெட்டிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.   விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியவர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.   இந்நிலையில் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

ரயில் விபத்தில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 275  தான் -  ஒடிசா அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

அடையாளம் காணப்படாத நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இறந்தவர்கள் எண்ணிக்கை 288 அல்ல,  275 தான் என ஒடிசா அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக ஒடிசா அரசு தலைமை செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்ததாவது, “ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 275 ஆகும். 288 கிடையாது. மாவட்ட மாஜிஸ்திரேட் தரவுகளை சரிபார்த்ததில் சில உடல்கள் இருமுறை எண்ணப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 275 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 88 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த 1,175 பேரில் 793 பேர் குணம் அடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.