மக்களவை வரும் 24ம் தேதி கூடுகிறது!
18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் பிரதமராக 3வது முறையாக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிபிரமாணம் செய்துவைத்தார். நரேந்திர மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டனர். பிரதமராக மோடி, 30 ஒன்றிய அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள், 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். குறிப்பாக மத்திய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், ஜெ.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர். மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரான சிவராஜ் சௌஹான் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி தொடங்குகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் 2 நாட்கள் பதவியேற்பார்கள். உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். 27ல் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார்.


