ரயில் விபத்தில் பலியானவர்களுகு 10ம் நாள் காரியம் செய்த கிராம மக்கள்

 
odisha

ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக அப்பகுதி கிராம மக்கள் 10ம் நாள் காரியம் செய்துள்ளனர். 

கடந்த 2ம் தேதி இரவு 7 மணியளவில்  மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்,  ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹனாகா பஜார்  ரயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, மாற்று தண்டவாளத்தில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது. அப்போது அந்த தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு கிடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது மின்னல் வேகத்தில் மோதியது. அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,175 பேர் காயமடைந்துள்ளனர். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த கோரவிபத்து நடந்த பகுதியில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. விபத்து நடந்த பகுதியில் வசிக்கும் மக்கள், இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. ரயில் விபத்து நடந்து 10 நாள் ஆகிவிட்ட நிலையில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு கிராம மக்கள் 10-ம் நாள் ஈமச்சடங்குகள் செய்தனர். இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினர் என்னென்ன சடங்குகள் செய்வார்களோ, அந்த சடங்குகள் அனைத்தையும் விபத்து நடந்த பகுதி கிராம மக்களே செய்தனர்.