ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் இது தான் - மத்திய ரயில்வே துறை அமைச்சர்

 
Ashwini

விபத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம் என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

ஒடிசாவின் பாலாசோர் மாவட்டம் பகனாகா பஜார் அருகே நேற்று முன் தினம் இரவு பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை நோக்கி வந்த  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிகளவில் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுவரை ஒடிசா ரயில் விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  

இந்த நிலையில், ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சார் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் சென்று பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கோரமண்டல் ரெயில் விபத்தில் அனைத்து சடலங்களும் அகற்றப்பட்டுள்ளது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடத்த இடத்தில் வரும் புதன் கிழமைக்குள் சீரமைப்பு பணிகளை முடித்து ரெயில் சேவையை மீண்டும் துவக்க திட்டமிட்டுள்ளோம். ரயில் விபத்துக்கான விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணத்தையும் அதற்கு காரணமானவர்களையும் கண்டறிந்துள்ளோம். எலக்ட்ரானிக் இன்டர்லாக் மாற்றத்தால் இந்த சம்பவம் நடந்தது. இவ்வாறு கூறினார்.