திருப்பதி என்றாலே பெருமாள் தான்.. திருமாலின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் - சந்திரபாபு நாயுடு..
திருமலையில் 1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் தயார் செய்யும் விதமாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சமையற்கூடத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.
திருமலையில் உள்ள பாஞ்சஜன்யம் ரெஸ்ட் ஹவுஸின் பின்புறம் உள்ள வெளிவட்ட சாலையில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் 37,245 சதுர அடிப்பரப்பளவில் ₹ 13.45 கோடியில் கட்டப்பட்ட மேம்பட்ட மற்றும் சிறப்பு வசதிகள் கொண்ட வகுளமாதா சமையல் கூடத்தை ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு திறந்து வைத்தார். விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தரும் போது, இந்த புதிய மையப்படுத்தப்பட்ட சமையலறையில் இருந்து 1.20 லட்சம் பக்தர்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவுகளான புளிதோரை, சாம்பர் சாதம், பொங்கல் மற்றும் உப்மா ஆகியவற்றை ஒரு நாளில் வழங்கும் விதமாக தயாரிக்கும் வசதி இங்குள்ளது. இங்கிருந்து அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் மத்திய வரவேற்பு அலுவலகம், பிஏசி- I, ராம் பாகிச்சா ரெஸ்ட் ஹவுஸ் பஸ் ஸ்டாண்ட், வெளிப்புற வரிசைகளில் இருக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

முன்னதாக அதிகாரிகளுடன் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் ஆய்வு மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு, அதிகாரிகளிடம் பேசுகையில், “ திருமலையின் புனிதத்தையும் நம்பிக்கையையும் பாதுகாக்க அனைவரும் இங்கு பணியாற்ற வேண்டும். திருமலையில் கோவிந்த நாமத்தை தவிர வேறு எந்த அரசியல் பேச்சுகள் இருக்க கூடாது. பக்தர்களுக்கு ஒரு சதவீதம் கூட எங்கும் தொந்தரவு செய்யக்கூடாது. எதிலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். எதிர்கால நீர் தேவைகளை பூர்த்தி செய்ய நீர் இருப்பை உறுதி செய்து முன்கூட்டிய திட்டமிட்டு செயல்பட வேண்டியது அவசியம். திருமலை வனப்பரப்பை 72ல் இருந்து 80 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். வனப் பாதுகாப்பு மற்றும் காடுகளை விரிவுபடுத்துவதற்கான திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த வேண்டும். பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க எடுக்கப்படும்.” என்றார்.
மேலும், “தேவஸ்தானத்தின் சேவைகள் குறித்து ஒவ்வொரு பக்தருக்கும் அவர்களின் அனுபவங்களைப் பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். பக்தர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் தேவஸ்தான சேவைகளில் பணியாற்ற வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தானம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் பக்தர்களின் கருத்தை கேட்க வேண்டும் என்று அறநிலையத்துதை அமைச்சர் ரன்நாராயண ரெட்டிக்கு முதலமைச்சர் பரிந்துரைத்தார். லட்டு பிரசாதம் மற்றும் அன்ன பிரசாதத்தின் தரம் உயர்ந்துள்ளது எப்போதும் இது தொடர வேண்டும். மேலும் மேம்பட வேண்டும் என பக்தர்கள் கூறி வருகின்றனர். பிரசாதம் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் நன்றாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவும், சிறந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். திருமலையில் விஐபி கலாச்சாரம் குறைய வேண்டும். முக்கிய பிரமுகர்கள் வரும்போது பக்தர்களை சிரமப்படுத்தும் வகையில் இல்லாமல் எளிமையாகவும் ஆன்மிக சிந்தனையுடன் இருக்க வேண்டும்.

தேவையில்லாத சலசலப்பு மற்றும் தேவையற்ற செலவுகள் வேண்டாம். தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களிடன் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்து வருபவர்களை மதித்து கெளரவிக்க வேண்டும். எந்த இடத்திலும் தவறான நடத்தைக்கு இடமில்லை. பக்தர்கள் திருப்தியுடனும் ஆன்மீக உணர்வுடனும் மலையிலிருந்து திரும்பிச் செல்ல வேண்டும். திருப்பதி என்றால் பெருமாள் என்ற பெயர் மட்டுமே நினைவுக்கு வரவேண்டும். ஏழுமலையானின் மகிமையும் ஆன்மிகமும் மட்டுமே பேசப்பட வேண்டும். சுவிம்ஸ் மருத்து மனை சேவைகளும் மேம்படுத்தப்பட வேண்டும்.இது ஒரு தனித்துவமான பகுதி திருமாலின் புனிதத்தையும், ஆன்மிக விஷயங்களையும் பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
ஸ்ரீவாரி சேவை (தன்னார்வ சேவை) முக்கிய ஆன்மீக அமைப்புகளுடன் இணைந்து மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். எனவே ஸ்ரீவாரி சேவா தன்னார்வலர்கள் மூலம் பக்தர்களுக்கு நல்ல சேவைகள் வழங்கப்பட வேண்டும்” என முதல்வர் சந்திரபாபு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.


