ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ்- குழந்தை பலி!
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை போலீஸ் இழுத்து பிடித்ததால், பைக்கில் இருந்த மூன்று வயது குழந்தை கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதிக்கு அபராதம் விதிக்க போலீசார், அந்த தம்பதியை இழுத்து பிடித்து, நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பைக்கில் இருந்து தவறி விழுந்த மூன்று வயது குழந்தை மீது, பின்னால் வந்த டெம்போ வாகனம் மோதியதில் குழந்தை தலையில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தது.
ரித்தீக்ஷா என்ற அந்த குழந்தை, தனது கிராமத்திலிருந்து மண்டியாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, காவல்துறையினர் பைக்கைத் தடுத்து நிறுத்தியதாகவும், இதனால் அது கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கூறப்படுகிறது. குழந்தையின் இழப்பால் துயரமடைந்த குடும்பத்தினர், உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, மண்டியா மிம்ஸ் மருத்துவமனையின் வெளியே, குழந்தையின் உடலை நுழைவாயிலில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


