மகாராஷ்டிராவில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெரும்பான்மையை நிரூபிப்பாரா உத்தவ் தாக்கரே???..

 
உத்தவ் தாக்கரே


மகாராஷ்டிராவில்  முதலமைச்சர் உத்தவ் தாக்கரே நாளை ( வியாழக்கிழமை )  மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார்.
 
மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்து, பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள், மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி துக்கியுள்ளன. சிவசேனா கட்சி மூத்த அமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே,  தலைமையில்  40  சிவசேனா எம்.எல்.ஏ.க்களுடன் அசாமின் கவுகாத்தியில்  உள்ள் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். இதனால் மஹாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான  ( சிவசேனா - காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி )  மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே

இதனால் மகாராஷ்டிரா முழுவதும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளை , சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய அரசு முடிவு செய்திருந்த நிலையில்,  மஹாரஷ்டிர அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனால் ஜூலை 11 வரை அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

இந்த நிலையில்  உத்தவ் தாக்கரே  தலைமையிலான மகாராஷ்டிரா அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரிடம் பாஜக தலைவர் தேவேந்திர பட்னவீஸ் மனு அளித்திருக்கிறார்.  நேற்று இரவு ( செவ்வாய் கிழமை )  10:00 மணிக்கு ஆளுநரை சந்தித்த அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.  நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களில் 8 பேர், தாக்கரே  அரசு பெரும்பான்மை நிரூபிக்க வழிவகை செய்யுமாறு தேவேந்திர பட்னவீஸிடம்  மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாகவும்,   இதன் அடிப்படையிலேயே அவர் ஆளுநரை சந்தித்து  மனு அளித்ததாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

 உத்தவ் தாக்கரே

இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே நாளை மாலை 5 மணிக்குள் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டிருக்கிறார்.   இதையடுத்து  நம்பிக்கை வாக்கெடுப்புக்கான மகாராஷ்டிரா சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு  நடத்துமாறு சட்டமன்ற செயலாளுருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடிதம் எழுதியிருக்கிறார். அத்துடன் நாளைட்ய சிறப்புக் கூட்டத்தை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.