ரேஷன் கடைகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை; மத்திய அரசு திட்டம்!

 
cylinder

ரேஷன் கடைகள் மூலமாக சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்யும் சேவையை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் உயர்த்தப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனையாகிறது. கடும் விலை உயர்வால்  ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், நியாய விலைக்கடைகள் மூலமாக சிலிண்டர்களை சில்லறை விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

ration

இது தொடர்பாக மத்திய உணவுத் துறை செயலாளர் சுதான்சு பாண்டே மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் பெட்ரோலியம் ஆகிய அமைச்சகங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அக்கூட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்திற்குப் பிறகு உணவு நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 

அதில், ரேஷன் கடைகள் மூலம் 5 கிலோ எடைக் கொண்ட சிறிய எரிவாயு சிலிண்டரை விநியோகம் செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் இந்த திட்டத்தில் ஆர்வமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தை செயல்படுத்தல் விருப்பமிருக்கும் மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.