3 மாதங்களுக்கு பிறகு தான் தடுப்பூசி போடனும் - மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..

 
பூஸ்டர்


கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 மாதங்களுக்குப் பிறகே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த  கடந்த ஓராண்டுக்கும் மேலாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  இதுவரை 156 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. முதலில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில்,  கடந்த ஜன 3 ஆம் தேதியிலிருந்து  15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

அதன்படி ஜனவரி 10 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முதல்கட்டமாக சுகாதாரப பணியாளர்கள், காவல்துறை உள்ளிட்ட  முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு  வருகிறது.  2வது டோஸ் தடுப்பூசி செலுத்தி  9 மாதங்கள் ஆன பிறகே   பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா பாதித்தவர்களுக்கு  3 மாதங்கள் ஆன பிறகே தடுப்பூசி செலுத்த வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  மத்திய சுகாதாரத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்கு,  3 மாதங்களுக்குப் பிறகே பூஸ்டர் டோஸ் உள்பட அனைத்துவித கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்த வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

பூஸ்டர் டோஸ்

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள விகாஸ் ஷீல், அறிவியல் சான்றுகள் மற்றும் நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார். மேலும், 2வது டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு 9 மாதங்களுக்குப் பிறகே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.