“பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம்”- விக்ரம் மிஸ்ரி
இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பு பிறகும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறல்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். மூன்று மணிநேரத்திற்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறி இருப்பதால் பதில் தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது.
பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறது. சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தானின் செயல் கண்டிக்கத்தக்கது. இந்திய ஆயுதப்படைகள் சூழ்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் விதிமீறல் அரங்கேறினால் அதனை கடுமையாக கையாள அறிவுறுத்தப்பட்டுள்ளன. சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை புரிந்துகொண்டு பாகிஸ்தான் செயல்பட வேண்டும். நீர் நிலம் ஆகாயம் என அனைத்து வழியிலான தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்தை தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்திருக்கிறோம்” என்றார்.


