மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை.. 5 மாவட்டங்களில் ஊரடங்கு..
மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் முதல் மெய்தி, குக்கி மற்றும் நாகா இனத்தவர்களிடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 260 பேர் கொல்லப்பட்டதோடு, ஏராளமானோர் காயமடைந்தனர். பலர் வீடுகளை விட்டு வௌியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக முதல்வர் பைரன் சிங் பதவி விலகினார். இதனால் அங்கு இப்போது குடியரசு தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டதை அடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது அமைதி திரும்பியது.

இந்நிலையில் தற்போது மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. வன்முறையை தடுக்க பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதை அடுத்து , அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிப்பூரின் மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தவுபல், பிஷ்ணுபூர், காங்சிங் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த 5 மாவட்டங்களில் நேற்று இரவு 11.45 முதல் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.


