கேரளாவை உலுக்கிய விஸ்மயா வழக்கு: கணவருக்கு ஜாமீன்..!! 10 ஆண்டுகள் சிறை தண்டையை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட்..
கேரளாவை உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் அவரது கணவரின் சிறை தண்டனை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம், ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையைச் சேர்ந்தவர் விஸ்மயா. ஆயுர்வேத மருத்துவ இறுதி ஆண்டு படித்து வந்த அவருக்கும், மோட்டார் வாகன துறையில் ஆய்வாளராக பணியாற்றி வந்த கிரண் குமார் என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 100 சவரன் நகை 11 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் மற்றும் பணம் உள்ளிட்டவை திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே விஸ்மயா, அவரது கணவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை மீட்டு விசாராணையை தொடங்கிய போலீஸார், வரதட்சணை கொடுமை காரணமாக விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதை கண்டறிந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை கொல்லம் மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் விஸ்மயாவின் கணவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனிடையே தனது தண்டனையை நிறுத்தி வைக்க கோரி கிரண் குமார் தாக்கல் செய்த மனுவை 2022ம் ஆண்டு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கேரளா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை கிரண் குமார் நாடியிருந்த நிலையில், இன்று இம்மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கே.வினோத் சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கிரண் குமாருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிரண் குமாரை ஜாமினில் விடுவிக்கவும் உத்தரவிட்டனர்.


