"உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை"- விஸ்வாஸ் ரமேஷ் குமார் பேட்டி

 
வ் வ்

எல்லாம் என் கண் முன்னே நடந்தது, நான் உயிருடன் தப்பித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை என அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் ரமேஷ் குமார் உருக்கமாக கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் பகல் 1.17 மணிக்கு  லண்டன் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது தூரத்திலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து, விமான நிலையம் அருகே மேகானி நகர் குடியிருப்பு பகுதியில்   கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.  சரியாக 1.20 மணிக்கு கிட்டத்தட்ட 3 நிமிடங்களுக்குள்ளாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. விமானத்தில் இரண்டு விமானிகள், பத்து விமான பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணித்து உள்ளனர். விமானம் மேகானி நகரில் அமைந்துள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது விழுந்து நொறுங்கியது. விமானத்தில் சுமார் 90டன் வெள்ளை எரிபொருள் இருந்ததால் விமானம் விழுந்த உடனேயே வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரியத்தொடங்கியது.  இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11A இருக்கையில் பயணித்த, பிரிட்டன் குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் ரமேஷ் குமார் என்பவர் உயிர் பிழைத்துள்ளார். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஸ்வாஸ் ரமேஷ் குமார், “உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. நானும் இறந்துவிடுவேன் என நினைத்தேன். விடுதியில் விமானம் மோதிய பக்கம் நான் அமரவில்லை, நான் விழுந்த இடம் விடுதியின் தரைப்பகுதி. என் இருக்கை கழன்று விழுந்துவிட்டது, ச்எனக்கு அருகில் இருந்த கதவு உடைந்ததால் நான் வெளியில் வந்தேன். விமானம் விழுந்த பகுதியின் எதிர்ப்பக்கத்தில் சுவர் இருந்ததால் யாராலும் தப்ப முடியவில்லை. நான் அமர்ந்திருந்த பகுதியில் மட்டுமே தப்பிக்க இடம் இருந்தது. நான் எப்படி பிழைத்தேன் என எனக்கே தெரியவில்லை. புறப்பட்ட 30 விநாடிகளில் பெரும் சத்தத்துடன் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் என்னை சுற்றிலும் உடல்கள் சிதறிக்கிடந்தன. ஒரு பக்கம் அவசர வழி சேதமடைந்த நிலையிலும், மறுபக்கம் அவசர வழி வழியாக வெளியேறினேன்.” எனக் கூறியுள்ளார்.