வயநாடு இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் சொன்ன விளக்கம்..

 
வயநாடு இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் சொன்ன விளக்கம்..

கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றம்  ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பு அளித்ததை அடுத்து, வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தியை மக்களவை செயலகம் தகுதி நீக்கம் செய்தது.  இது தொடர்பாக ராகுல் காந்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், வயநாடு தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து  இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிப்பின் போது,  வயநாடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

rahul

அவ்வாறு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க கேரள மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.   இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், வயநாட்டில் தற்போது இடைததேர்தல் இல்லை என்று தெரிவித்தார்.  அவர் கூறியதாவது, “கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க 6 மாதம் வரை அவகாசம் உள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் உள்ளதால் இடைத்தேர்தல் அறிவிக்க அவசரம் இல்லை” என்று விளக்கம் அளித்தார்.