‘அந்த நேரத்தில் என்ன நடந்தது?’ - ஜெகதீப் தன்கர் ராஜினாமாவில் சந்தேகத்தை கிளப்பும் ஜெய்ராம் ரமேஷ்
ஜெகதீப் தன்கர் ராஜினாமாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் நடந்தது என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. ஆனால் 3 ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்த அவர், திடீரென நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது , அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காக ஜெக்தீப் தன்கர் பழிவாங்கப்படுகிறாரா? என சந்தேத்தை கிளப்பியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “நேற்று பகல் 12.30க்கு ஜெக்தீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவையில் அளுவல் ஆய்வுக் குழுக்கூட்டம் நடந்தது. அவையின் ஆளுங்கட்சித் தலைவர் நட்டா நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளுட்ட மூத்த உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர்.
மீண்டும் 4.30 மணிக்கு கூட்டம் கூடியபோது நட்டா, ரிஜிஜூ அதில் பங்கேற்கவில்லை. அதுகுறித்த தகவலும் தன்கரிடம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த தன்கர், இன்ரு பகல் 1 மணிக்கு கூட்டத்தை ஒத்திவைத்தார். நேற்று பிற்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒரு தீவிரமான விஷயம் நடந்துள்ளது. இப்போது யாரும் எதிர்பாராத விதமாக தன்கர் ராஜினாமா செய்துள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


