லக்கிம்பூரில் என்ன நடந்தது? உண்மை வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ்

 

நான்கு விவசாயிகள், நான்கு பாஜகவினர் உள்பட 9 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் லக்கிம்பூர் கல்வரத்தில்.   விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்றார்களா? இல்லை விவசாயிகள் தாக்கியதில் கார் நிலைதடுமாறி  விவசாயிகள் மீது ஏறியதா? என்ற சர்ச்சையில் உண்மை என்ன என்பதை விளக்கும் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருக்கிறது.  

la2

பாஜக ஆளும் அரியானாவில் நெல் கொள்முதலை தாமதமாக்குவதை கண்டித்து    விவசாயிகள் ஆளுங்கட்சியினரின் வீடுகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.  அவர்கள் மீது போலீசார் கடும் தாக்குதலை கையாண்டதை கண்டித்து  உத்தரபிரதேசத்தில் பல்வேறு இடங்களில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி  போராட்டம் நடத்தி வந்தார்கள். 

அந்த நேரத்தில் உத்தரபிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, லக்கிம்பூர் கேரியில் இருக்கும் டிகுனியாவில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்றார்.  அவரை வரவேற்பதற்காக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா காரில் சென்றிருக்கிறார்.  அவருடன் சில கார்களும் சென்றிருக்கின்றன.   அஜய் மிஸ்ராவும் அந்த நிகழ்வில் பங்கேற்றதால் அவரின் பாதுகாப்பு வாகனங்கள்தான் ஆஷிஸ் மிஸ்ராவின் கார் பின்னால் சென்றதாக கூறப்படுகிறது.

la4

லக்கிம்பூர் கேரி அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், கண்டனம் எழுப்புவதற்காக ஆஷிஷ் மிஸ்ராவின் காரை மறித்திருக்கிறார்கள்.  இதில், ஆத்திரமடைந்த ஆஷிஷ் மிஸ்ரா, கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் போராடிய விவசாயிகள் மீது  காரை ஏற்றினார் என்று கூறப்படுகிறது.  ஆனால், பாஜகவின் வாகனங்கள் மீது விவசாயிகள் தடி, கல் வீசி தாக்குதல் நடத்தியதில் கார்கள் நிலை தடுமாறி விவசாயிகள் மீது மோதியது.  அதில் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினரின் வாகனத்திற்கு தீ வைத்தனர் என்றும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.  இந்த  கலவரத்தில் விவசாயிகள் 4 பேர் பாஜகவினர் 4 பேர் உட்பட 9 பேர் பலியாகி இருக்கிறார்கள்.  

la5

சம்பவம் நடந்த இடத்தில் தனது மகன் ஆஷிஸ் மித்ரா இல்லை.   அவர் முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தார்.   நானும் அந்த நிகழ்ச்சியில் தான் இருந்தேன் .அதற்கான வீடியோ ஆதாரம் இருக்கிறது.  சில சமூக விரோதிகள்தான் கத்தி, கம்பு கொண்டு தாக்கி இருக்கிறார்கள்.  என் மகன் மட்டும் அங்கு இருந்திருந்தால் நிச்சயம் உயிருடன் திரும்பி இருக்க மாட்டார் என்று அஜய் மிஸ்ரா கூறியிருக்கிறார்.  ஆனால் இதை மறுத்துள்ள விவசாய அமைப்பினர்,   மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகனங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்தார் என்றும்,  அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்றார் என்றும்,  நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் என்றும் கூறுகின்றனர்.  நடந்த உயிர்ப்பலிகளுக்கு தன் மகன் காரணம் இல்லை என்று அமைச்சர் சொன்னாலும் விவசாயிகள் சொன்ன குற்றச்சாட்டின் படி ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  இதில் ஆஷிஸ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

lhm

விவசாயிகள் தாக்கியதில் கார் நிலைதடுமாறி விவசாயிகள் மீது ஏறியதில் உயிரிழந்தனர் என்று அமைச்சர் தரப்பில் சொல்லப்படும் நிலையில்,  காரை மறித்து முழக்கம் எழுப்பியதால்  காரை ஏற்றிக்கொன்றார்கள் என்கிறார்கள் விவசாயிகள்.  இதில், காரை ஏற்றி கொன்றதுதான் உண்மை என்று அதற்காக ஆதார வீடியோவை  நேற்று இரவு காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் வெளியிட்டிருக்கிறது.