“இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.. பாகிஸ்தானை காப்பாற்ற முயல்கிறாரா ப.சிதம்பரம் - மக்களவையில் அமித்ஷா கடும் தாக்கு..!!
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்களித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் , 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்னும் பதில் தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்த 9 பயங்கரவாத உட்கட்டமைப்பு இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியிருந்தது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் 4 நாட்களில் இருநாடுகளில் போர் நிறுத்த முடிவுக்கு உடன்பட்டனர். அதேநேரம் அமெரிக்காவின் தலையீட்டால் தான் இந்த போர் சூழல் முடிவுக்கு வந்ததாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையாகி எதிர்க்காட்சிகள் விவாதத்தை தொடங்கிய நிலையில், ராணுவ மாட்டத்திலான பேச்சுவார்த்தையிலேயெ போர் முடிவுக்கு வந்ததாகவும், மூன்றாவதாக ஒரு நாட்டின் தலையீடு என்கிற பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்தது.

இந்நிலையில் நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ர்ம்ப் மத்தியஸ்தம் செய்தது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் நேற்று பிற்பகலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்த நிலையில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் விளக்கமளித்தார். அவர், “காஷ்மீரில் நேற்றி பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்கள் ஆவர். பஹல்காமில் தாக்கிதல் நடத்திய பயங்கரவாதிகள் நாட்டை விட்டு தப்பிச்சென்றுவிடக்கூடாது என்று பாதுகாப்பு படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நேற்று நடந்த ஆபரேஷன் மகாதேவின் போது பயங்கராவாதிகள் சுலைமான், ஆப்கன், ஜிப்ரன் ஆகிய 3 பேரும் அடையாளம் காணப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் சுலைமான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்டுள்ளான். மேலும் சுலைமானுக்கு பஹல்காம் தாக்குதல் மட்டுமின்றி, காஷ்மீரின் ஜகாங்கீர் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கும் தொடர்புள்ளது.
காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் தர முயற்சிக்கிறார். பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா” என்பதற்கு ஆதாரத்தை ப.சிதம்பரம் கேட்கிறார். அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகள், சாக்லேட்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை. இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதற்கு எதிர்கட்சிகள் மகிழ்ச்சியடைவார்கள் என நினைத்தேன்; ஆனால் எதிர்கட்சியினர் கவலையடைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்.


