ஓய்வை அறிவிப்பாரா மோடி?? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் ஜாடை பேச்சு யாருக்கு??
75 வயதை எட்டிவிட்டால் நீங்கள் செய்வதை நிறுத்திவிட்டு மற்றவர்களுக்கு வழிவிட வேண்டும் என்று அர்த்தம் என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற மோரோபந்த் பிங்லியின் புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “தேசத்தை கட்டி எழுப்ப தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர் மோரோபந்த் பிங்லி. அவசர நிலைக்கு பிந்தைய அரசியல் குழப்பத்தின் போது முடிவுகளை சரியாக கணித்தவர். அவரது இயல்பு மிகவும் நகைச்சுவையானது. மோரோபந்த் பிங்லி தேச சேவையில் அர்ப்பணிப்புடன் இருந்தார். தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். ‘நீங்கள் வயதாகிவிட்டீர்கள்… ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள்’” என்று அவர் பேசியிருந்தார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவரின் இந்த பேச்சு, பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. அவர் மறைமுகமாக பிரதமர் மோடியை விமர்சித்துள்ளதாக எதிர்கட்சிகள் பரபரப்பை கிளப்பியுள்ளன. ஏனெனில் பிரதமர் மோடியும் வருகிற(2025) செப்டம்பரில் , 75 வயதை எட்டுகிறார். ஆகையால் அவர் அரசியல் இருந்து ஓய்வு பெறுகிறாரா என்பது குறித்த கேள்வியை தூண்டும் விதமாக, மோகன் பகவத்தின் பேச்சு அமைந்துள்ளது.

முன்னதாக எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி மற்றும் ஜஸ்வந்த்சிங் போன்ற தலைவர்களை 75 வயது நிரம்பிய பிறகு , ஓய்வு பெற வேண்டும் என பிரதமர் மோடி கட்டாயப்படுத்தியதாக சிவசேனா கட்சியின் எம்.பி., சஞ்சய் ராவத் கூறியுள்ளார். ஆகையால் 75 வயதை எட்டும் பிரதமர் மோடியும் அதேபோல் ஓய்வை அறிவிப்பாரா? என கேள்வி எழுந்து வருகிறது.
ஏற்கனவே பிரதமர் மோடி, கடந்த மார்ச் மாதம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு சென்றபோதும் இதேபோன்று அவரது ஓய்வு குறித்த சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் கடந்த 2023ம் ஆண்டு மே மாதமே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இதுகுறித்து தெளிவு படுத்தியிருந்தார். அதாவது, பிரதமர் மோடி 2029ம் ஆண்டு வரை தொடர்ந்து தலைமை தாங்குவார் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.,


