ரயில் விபத்திற்கு மோடி பொறுப்பேற்பாரா?? அஷ்விணி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்..

 
pawan khera - பவன் கேரா

ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்கும் வகையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது..

275 பேர் பலியாவதற்கு காரணமான ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பல்வேறு எதிர்க்கட்சிகள் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், அக்கட்சி செய்தித்தொடர்பாளருமான பவன் கேரா,  ரயில் விபத்துகளுக்கு தார்மீக பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி மற்றும் நிதீஷ் குமார் பதவி விலகியத்தையும்,  விமான விபத்திற்கு பொறுப்பேற்று மாதவ் ராவ் சிந்தியா ராஜினாமா செய்ததையும் சுட்டிக்காட்டினார்.  ஆனால் மோடி அரசிடம் தார்மீகமோ,  பொறுப்போ இல்லை என்ற விமர்சித்த அவர் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஒடிசா ரயில் விபத்து

எலக்ட்ரானிக் சிக்னல் இன்டெர்லாகில் குறைபாடு இருப்பதை கடந்த பிப்ரவரி மாதமே ரயில்வே அமைச்சக அதிகாரிகள் சுட்டிக்காட்டிய போதும், உரிய  நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. தற்போது ஒடிசா ரயில் விபத்திற்கு மின்னணு சிக்னல் இன்டெர்லாகின் மாற்றமே காரணம் என்று ரயில்வே அமைச்சர் கூறுவதால் விபத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுக்கொள்வாரா என்றும்  பவன் கேரா கேள்வி எழுப்பினார்.  சிறிய ரயில் நிலையத்தில் கூட கொடியுடன்  இருக்கும் பிரதமர் மோடி,  சுய விளம்பரத்திற்காகவே  நேற்று கேமராக்கள் புடைசூழ ஒடிசா  சென்றதாகவும் அவர்  விமர்சித்துள்ளார்..