கேரளாவில் இன்று 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

 
Rain

கேரளாவில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, டெல்லி, ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா  உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.  வளிமண்டல மேல்திசை காற்றில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக வடமாநிலங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இதனால் இதுவரை சுமார் 90 பேர் வரை பலியாகியுள்ளனர். இதேபோல் அண்டை மாநிலமான கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அந்த மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்நிலையில் கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவின் எர்ணாகுளம், இடுக்கி, கோழிக்கோடு, திரிச்சூர், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாளை இடுக்கி, கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.