யோகா உலகை இணைக்கிறது - பிரதமர் மோடி..

 
modi


சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

4 நாட்கள் அரசமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி,  அந்நாட்டு அதிபர் ஜோபைடனை அவர் சந்தித்து பேச இருக்கிறார். முன்னதாக  நியூயார்க் சென்றடைந்த மோடி, இந்திய வம்சாவளியினர்,  தொழில் அதிபர்கள், நோபல் பரிசு வென்றவர்கள், பல்வேறு துறை வல்லுனர்கள், விஞ்ஞானிகள், முன்னணி நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் உள்ளிட்டோரை சந்தித்த அவர்,   நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை தலைமையகத்தில்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார்.  

yoga
 
சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா.வில் நடைபெறும் யோகா அமர்வுக்கு, பிரதமர் மோடி தலையைமையேற்று தொடங்கி வைத்தார். முன்னதாக சர்வதேச யோகா தினத்தையொட்டி, அமெரிக்காவில் இருந்தபடி நாட்டு மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சர்வதேச யோகா தினத்தின் மூலம் யோகா உலகளாவிய இயக்கமாக மாறியுள்ளது. யோகா உலகை இணைக்கிறது. யோகா மூலம் முரண்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். "வசுதைவ குடும்பகம்" (உலகம் ஒரே குடும்பம்) என்ற கருப்பொருளுடன் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் யோகா செய்கிறார்கள்.

யோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும். யோகா பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடல், மூளை, ஆன்மாவை அமைதி படுத்தலாம். அவசர அவசரமாக பணிக்கு சென்றாலும் அவசியம் நாள்தோறும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யோகா நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன். இந்தியாவின் அழைப்பின் பேரில் 180 க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைவது வரலாற்றுச் சிறப்புமிக்கது. 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் யோகா தினத்திற்கான முன்மொழிவு வந்தபோது, அது பெரும்பான்மையான நாடுகளால் ஆதரிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.