சர்வதேச மகளிர் தினம் 2023 - இந்த தினம் ஏன் கொண்டாடப்படுகிறது? இதன் வரலாறு என்ன? முழு விவரம் இதோ!

ஆண்டுதோறு மார்ச் 08ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஏன் இந்த தினம் கொண்டாடப்படுகிறது, இது எப்போது இருந்து கடைபிடிக்கப்படுகிறது, பெண்கள் தினம் கொண்டாடப்பட வேண்டிய கட்டாயம் என்ன? என்பது தொடர்பான கருத்துக்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
உலகெங்கிலும் உள்ள பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளை கௌரவிக்கும் மற்றும் கொண்டாடும் நாளாக ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்துக்காக நடந்து வரும் போராட்டத்தை ஒப்புக்கொள்வதற்கும், பாலின அடிப்படையிலான பாகுபாட்டை அகற்ற நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுப்பதற்கும் இது ஒரு நாள். 1900 ஆண்டுகளில் இருந்தே சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. 1908ஆம் ஆண்டில் பெண்கள் மீதான அடக்குமுறை, பாலின சமத்துவமின்மை குறித்து நிறைய விவாதங்கள் நடந்தன. இந்த நிலையில் பெண்கள் மீதான் ஆடக்குமுறைக்கு எதிராக 15 ஆயிரம் பெண்கள் அமெரிக்காவின் நியூயார்க்கில் குறுகிய வேலை நேரம், வாக்களிக்கும் உரிமை மற்றும் சிறந்த ஊதியம் ஆகியவற்றைக் கோரி மாபெரும் பேரணி நடத்தினர். அவர்களின் போராட்டத்தை கவுரவிக்கும் விதமாக 1909 ஆம் ஆண்டு, முதல் மகளிர் தினம் அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்பட்டது.
1910 இல், உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாடு கோபன்ஹேகனில் நடைபெற்றது. ஜெர்மனியின் சமூக ஜனநாயகக் கட்சியின் மகளிர் அலுவலகத்தின் தலைவரான கிளாரா ஜெட்கின் இதை முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து மார்ச் 19ஆம் தேதி 1911ஆம் ஆண்டில், ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து முதல் முறையாக சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடியது. 1913 மற்றும் 1914க்கு இடையில், ரஷ்யாவில் பெண்கள் முதல் மகளிர் தினத்தை பிப்ரவரி 23 அன்று கொண்டாடினர். அதன் பிறகு தான் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமமாக கொண்டாட தொடங்கியது. 1975ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை முதல் முறையாக சர்வதேச மகளிர் தினத்தை ஏற்பாடு செய்தது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 08ம் தேதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.