சர்வதேச மகளிர் தினம் 2023: பெண்கள் மட்டுமே வசிக்கும் விநோத கிராமம்
கிழக்கு ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் உள்ளது உமோஜா என்ற கிராமம். இங்கு பெண்கள் மட்டுமே வசிக்கின்றனர். காரணம் என்ன? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கென்யாவின் வடக்குப்பகுதியில் உள்ள உமோஜா கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளாக ஆண்களே இல்லை என்கின்றனர் அங்கு வசிக்கும் சம்பூர் சமூக மக்கள். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், குடும்பத்தில் கணவரால் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள், வரதட்சணைக் கொடுமையால் வாழ்க்கையை இழந்த பெண்கள், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து காப்பற்றப்பட்ட குழந்தைகள் ஆகியோர் வசிக்கின்றனர். கிராமத்தின் மொத்த எண்ணிக்கையே 200 தான்.
கிராமத்தின் தலைவராக ரெபேக்கா லோலோசோலி என்பவர் உள்ளார். இவரும் மற்ற 16 பெண்களும் ஒன்றிணைந்து உமோஜா கிராமத்தை உருவாக்கினர். இப்போது அந்த கிராம தன்னிறைவு நிறைந்த கிராமமாக மாறியுள்ளது. பெண்களை மதிக்கும் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் என்கிறார் ரெபேக்கா. பெண்கள் மற்றும் குழந்தைகள் வசிக்கும் இந்த கிராமத்திற்குள் நுழைய ஆண்களுக்கு அனுமதியில்லை. அதுமட்டுமின்றி, இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் ஆண் குழந்தைகளையே வெறுக்கின்றனர்.
இங்குவாழும் மக்கள் தங்கள் வயிற்று பிழைப்புக்காக பாரம்பரிய நகைகள், கைவினைப் பொருட்களை உருவாக்கி விற்றுவருகின்றனர். இந்த கிராமத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. அவர்களால் இந்த பெண்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இங்கு வசிக்கும் பெண் குழந்தைகளுக்காக பள்ளி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் ஆண்களை மட்டுமே நம்பி வாழும் பெண்கள் மத்தியில், இந்த ‘மகளிர் மட்டுமே’ கிராமம், பெண்ணுரிமைக்கான அங்கீகார வெளிச்சம் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.