• June
    25
    Tuesday

Main Area

Mainஇந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடக்கம்

teamindia
teamindia
Loading...

-குமரன் குமணன்

சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நாளை தொடங்கவுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற T20 தொடரின் இரண்டாம் போட்டி மழையால் தடைபட்டதால் 1-1 என தொடர் சமனில் முடிந்தது .டெஸ்ட் தொடரில் 2-1 என்ற இந்தியா முதல் முதலாக வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில், இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்கு தொடங்கி நடக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகள் முறையே அடிலெய்டு (காலை 8.50 மணி) மற்றும் மெல்போர்ன் (காலை 7.50 மணி) நகரங்களில் 15 மற்றும் 18-ஆம் தேதிகளில் நடக்க விருக்கின்றன.

உலக கோப்பை தொடர் மே 30-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணிகளும் அதற்கான முன் தயாரிப்பில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டன. அந்த வகையில் இந்திய அணிக்கு, உலக கோப்பைக்கு  முன் பதிமூன்று போட்டிகள் உள்ளன. அவற்றை வைத்தே சரியான கூட்டணியை தேர்வுக்குழு அடையாளம் காண இயலும்.

குறிப்பாக, பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் களமிறங்க பலரை பயன்படுத்தி பார்த்தும் உறுதியான தீர்வு பல்லாண்டுகளாக கிடைக்கவில்லை. நான்காண்டுகளாக நீடித்து வரும் இந்த தலைவலிக்கு மருந்து யாரிடம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

கடந்த ஆண்டு ஆசிய கோப்பை போட்டித்தொடரின் போது கோலி, ராயுடுவின் பெயரை நான்காம் நிலைக்கு உறுதி செய்தார். அத்தொடரில் 6 போட்டிகளில் விளையாடி இரு அரை சதங்களுடன் 175 ரன்கள் எடுத்தார் ராயுடு. அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு வந்தபோது நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4 போட்டிகளில் பேட் செய்த ராயுடு, ஒரு சதம் ஓரு அரை சதம் உட்பட 217 ரன்கள் எடுத்திருந்தார் . தற்போதைய நிலையில் நடுவரிசை வீரராக களமிரங்க ராயுடுவுக்கே வாய்ப்பு அதிகம்.

அதே போல், இடது கை வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் அண்மையில் நுழைந்துள்ளார் கலீல் அஹமத். இவர், அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் பந்து வீசினால், இங்கிலாந்து செல்லும் உலக கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இதற்கடுத்தாக இந்திய நியூசிலாந்து சென்று விளையாடும் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களிலும் அவர் பங்கேற்க  மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோலி தலைமையிலான இந்திய அணியில் தோனி இடம் பெற்றுள்ளார். இந்திய அணி விளையாடிய கடைசி ஆறு சர்வதேச (இருபது ஓவர் ) போட்டிகளில் பங்குபெறாத அவர் அணிக்கு திரும்புகிறார்.

பேட்ஸ்மேன்களில் ரோஹித் ஷர்மா, ஷிகார் தவன் ,ராயுடு, தினேஷ் கார்த்திக், லோகேஷ் ராகுல் ஆகியோரும் ஆல்ரவுண்டர்கள் கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பண்ட்யா மூவரும் அணியில் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அஹமத், மொஹமத் சிராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது . அண்மைக்காலமாக பிரதான சுழற்பந்து வீச்சு கூட்டணியாக செயல்பட்டு வரும் குல்தீப் யாதவ் மற்றும் யுசுவேந்திர சஹால் இத்தொடரிலும் தங்கள் வேட்டையை தொடர காத்திருக்கின்றனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஓன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பெண்கள் பற்றி கருத்து தெரிவித்த ஹர்திக் மற்றும் அப்போது அவருடன் இருந்த ராகுல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் நாளைய போட்டிக்கு அவர்களை தேர்வு செய்ய வேண்டாம் என அணி நிர்வாகத்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்  நாளைய போட்டிக்கான 11 பேர் கொண்ட அணியை இன்றே அறிவித்து விட்டது. எட்டு ஆண்டுகளுக்கு பின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் அணிக்கு திரும்பியுள்ளார். உடல்நல குறைவு காரணமாக மிட்செல் மார்ஷ் விளையாட மாட்டார். அவருக்கு பதில் வலதுகை ஆட்டக்காரரும் பகுதி நேர சுழற்பந்து வீச்சாளருமான ஆஷ்டன் டர்னர் சேர்க்கப்பட்டு உள்ளார். 

நாளைய போட்டிக்கான ஆஸ்திரேலிய XI 

ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன் ) 
அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர், துணை கேப்டன் )
உஸ்மான் க்வாஜா
ஷான் மார்ஷ் 
பீட்டர் ஹான்ட்ஸ்கோம்ப்
மார்கஸ் ஸ்டாய்னிஸ் 
க்ளென் மேக்ஸ்வெல் 
நாதன் லியோன் 
பீட்டர் சிடில் 
ஜய் ரிச்சட்ஸன் 
ஜேசன் பெஹ்ரெண்டோஃப் 

அணியில் இடம்பெறாத வீரர்கள் 

மிட்செல் மார்ஷ் 
ஆடம் ஸாம்பா 
பில்லி ஸ்டான்லேக் 

கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இருதரப்பு தொடரில் இந்தியா 4-1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அத்தொடரில் முதல் நான்கு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுவிட , கடைசி போட்டியில் மட்டுமே இந்தியாவால் வெல்ல முடிந்தது நினைவிருக்கலாம்.

2018 TopTamilNews. All rights reserved.