• May
    26
    Sunday

Main Area

Main



நிறைவடைந்தது கும்பமேளா; மகாசிவராத்திரியில் மட்டும் ஒரு கோடி பேர் புனித நீராடல்!

கும்பமேளாவில் கலந்து கொண்ட அகோரி
கும்பமேளாவில் கலந்து கொண்ட அகோரி
Loading...

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், இரு மாதகாலமாக கோலாகலமாக நடந்து வந்த கும்பமேளா நிறைவடைந்தது.

பாற்கடலிலிருந்து பெறப்பட்ட அமுத கலசத்தை திருமால் சுமந்து சென்ற போது, அதில் இருந்து 4 துளிகள் நான்கு இடங்களில் விழுந்தன. அவை, அலகாபாத் (பிரயாக்ராஜ்), நாசிக், உஜ்ஜையினி, ஹரித்வார் ஆகிய இடங்கள் என்றும், இந்த இடங்களில் அமுதம் விழுந்த நாளில் கும்பமேளா விழா நடத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. 

kumbh mela

அமுதம் சிந்திய இடங்களில் உள்ள நீர் நிலைகளில், அன்றைய நாளில் அமுதம் பொங்குவதாக ஐதீகம். அன்று நீராடுவது எல்லாவித பாவங்களையும் நீக்கி சந்தோஷத்தைத் தரும் என்பது நம்பிக்கை. இதனால் தான், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் மூன்றும் கூடும், திரிவேணி சங்கமத்தில், லட்சக்கணக்கானோர் புனித நீராடுகின்றனர்.

kumbh mela

அதன்படி, கடந்த 2013ம் ஆண்டு, பூரண கும்பமேளா நடைபெற்ற நிலையில், அரை கும்பமேளா விழா கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி மகர சங்கராந்தியன்று தொடங்கியது. இந்த கும்பமேளாவானது மார்ச் மாதம் 4-ம் தேதி (நேற்று) மகா சிவராத்திரி வரை 50 நாள்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

kumbh mela

கும்பமேளாவிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் நீராடினர். இமயமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சாதுக்களும், அகோரிகளும், சாமியார்களும் வந்து குவிந்தனர்.

kumbh mela

உத்தரப்பிரதேச அரசு இம்முறை ரூ.4,500 கோடி செலவில் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்தது. கங்கை நதிக்கரையில் நட்சத்திர விடுதிகளுக்கு ஈடான வசதிகளுடன் கூடிய மக்கள் தங்க 2 ,000 கூடாரங்கள் அமைக்கப்பட்டன. இதற்காக சகலவசதிகள் கொண்ட தற்காலிக நகரம் உருவாக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய தற்காலிக நகரம் என்ற சிறப்பையும் இது பெற்றது.

kumbh mela

வழிபாட்டு நிகழ்வாக இருந்தாலும் உலக சாதனைகளும் இந்த கும்பமேளா விழாவின் போது நிகழ்த்தப்பட்டன. கும்பமேளா பதாகைகளை தாங்கி, 500 பேருந்துகள் வரிசையாக சாலையில் செய்த அணி வகுப்பு, 8 மணி நேரத்தில் ஏழாயிரத்து 664 பேர் உள்ளங்கை அச்சு பதித்த நிகழ்வு, கும்பமேளாவில், மிக அதிக மக்கள் கூடும் இடத்தைத் திறம்பட நிர்வகித்தது, மிகப் பெரிய சுகாதாரத் திட்டத்தை முன்னெடுத்தது மற்றும் பொது இடங்களில் மிக அதிகமாக ஓவியம் வரையப்பட்ட சம்பவம் உள்ளிட்டவைகள் கின்னஸ் சாதனைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

kumbh mela

இந்த நிகழ்வில் துப்புரவுப்பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களின் பாதங்களை பிரதமர் மோடி, கழுவியது பரபரப்பை ஏற்படுத்தியது.  பிரதமர் மோடி, பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மொரீஷியஸ் பிரதமர் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் புனித நீராடினர். மொத்தம் 55 நாட்கள் நடந்த உலகின் மிகப்பெரும் இந்த நிகழ்வில் 22 கோடி பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

kumbh mela

இறுதி நாளான நேற்று மகாசிவராத்திரி தினத்தையொட்டி, ஷாஹி சனான் என்று சொல்லப்படும் ராஜ நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடினர். கும்பமேளா விழா மீண்டும் 2025-ஆம் ஆண்டில் நடைபெறும்.

2018 TopTamilNews. All rights reserved.