உடல் எடையைக் குறைக்க மாத்திரை… நம்பிக்கை தரும் ஆய்வு!

உடல் பருமன், உடல் எடையைக் குறைக்க முடியாமல் திணறுபவர்கள் அதிகம். உடற்பயிற்சி, டயட் என எதுவும் பலன் அளிக்காத சூழலில் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் விழி பிதுங்கி அவதியுறுகின்றனர். இந்த மாத்திரை உடல் எடையைக் குறைக்கும், அந்த டானிக் உடல் எடையைக் குறைக்கும் என்று யார் என்ன சொன்னாலும் முயற்சி செய்து பலன் இன்றி அவதியுறுபவர்கள் பலர். இது போன்ற அங்கீகாரம் இல்லாத மருந்துகள் காரணமாக பக்கவிளைவுக்கு ஆளாகிப் பாதிக்கப்பட்டவர்கள் பலர்.
உடல் எடையைக் குறைக்க இதுவரை நம்பகமான மாத்திரை மருந்து என எதுவும் இல்லை. இந்த நிலையில் புற்றுநோய் கட்டிகளைக் கரைக்கத் தயாரிக்கப்பட்ட மருந்து ஒன்று, எலிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் உடல் எடையைக் குறைத்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை PLOS Biology என்ற ஆய்விதழில் வெளியாகி உள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு உடல் எடைக் குறைப்பு மருத்துவத்தில் மிகப்பெரிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
நம்முடைய உடலில் குரோத் டிஃபரன்சியேஷன் ஃபேக்டர் 15 (ஜிடிஎஃப் 15) என்ற ஒரு ஹார்மோன் உள்ளது. இது மன அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு காரணமாக உள்ளது. இந்த ஜிடிஎஃப் ஹார்மோன் அதிகமாக இருப்பது உடல் எடை குறையக் காரணமாக இருக்கிறது. இந்த ஹார்மோன் அளவு குறைவது உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதைத் தொடர்ந்து ஜிடிஎஃப் ஹார்மோன் அளவை அதிகரிப்பதற்கான மருந்துகளைத் தயாரிக்க ஆய்வுகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் டியூமர் எனப்படும் புற்றுநோய் - புற்றுநோய் அல்லாத கட்டிகளைக் கட்டுப்படுத்தற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து ஒன்று சோதனைச் சாலையில் எலிகளுக்கு செலுத்தப்பட்ட போது, அவற்றின் உடலில் ஜிடிஎஃப் 15 அளவு அதிகரித்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு உடல் பருமன் குறைப்பு மருத்துவத்தில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் உடல் நல குறைபாட்டைத் தவிர்க்க இந்த மருந்து மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து எலிகளுக்குப் பசியைக் குறைத்து, உணவு உட்கொள்வதைக் குறைத்து, உடல் எடையைக் குறைத்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.