மீன் Vs இறைச்சி... எது நல்லது?

 
Meat and Fish

மீனை சிலர் அசைவமாக பார்ப்பது இல்லை. மீனை இறைச்சி வகையில் ஒன்றாக பலரும் கருதுவது இல்லை. மீன் உணவு எப்போதும் உடலுக்கு நன்மை செய்யக் கூடியதாக உள்ளது. இதற்கு அதில் அதிக அளவில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளிட்ட விஷயங்கள் காரணமாக இருக்கின்றன.

இதர இறைச்சி வகைகளைக் காட்டிலும் மீன் வேறுபட்டதாக இருக்கிறது. ரெட் மீட்களில் சாச்சுரேட்டட் கொழுப்பு, வைட்டமின் பி 12, இரும்புச் சத்து, நியாசின், துத்தநாகம் அதிக அளவில் இருக்கும். அதுவே மீன் என்றால் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் டி, தயாமின், செலினியம் மற்றும் ஐயோடின் அதிக அளவில் இருக்கும்.

ரெட் மீட் சாப்பிடுவது கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்யும். ஆனால், மீன் உணவு கொழுப்பு அளவைக் குறைக்கச் செய்து இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. தொப்பையைக் கரைக்க உதவுகிறது. டிரை கிளரைட் அளவைக் குறைத்து, எச்டிஎல் என்ற நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது.

ரெட் மீட் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் 84 ஆயிரம் பெண்களிடம் 26 ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் அவர்களுக்கு இதய நோய் வருவதற்கான அதிகமாக இருப்பதும், மீன் உணவு, நட்ஸ் சாப்பிட்ட பெண்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பு குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது. இதன் காரணமாகத்தான் மருத்துவர்கள், அமெரிக்காவின் பிரபலமான அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் உள்ளிட்ட அமைப்புகள் இறைச்சிக்குப் பதில் மீன் உணவை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைக்கின்றனர்.

ரெட் மீட்டில் இரும்புச் சத்து உள்ளதால் ரத்த சோகை வராமல் தடுக்கும். மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் அது மூளையின் வளர்ச்சி, செயல்பாட்டுக்கு உதவி செய்யும்.

மீன்கள் நல்லதுதான்... ஆனால் கடலில் மனிதன் ஏற்படுத்தி வரும் மாசு காரணமாக மீனின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. சில வகையான மீன்களின் உடலில் அதிக அளவில் பாதரசம் சேர்கிறது. இத்தகைய பாதிப்பு மிக்க மீன்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம்முடைய உடலிலும் பாதரசம் அளவு அதிகரித்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.

அதே போல் அளவுக்கு அதிகமாக ரெட் மீட் சாப்பிட்டு வருவது புற்றுநோய்க்கான வாய்ப்பை அதிகரித்துவிடும். ரெட் மீட்டை அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிதைந்து, புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் உருவாகிறது. எனவே, எந்த இறைச்சியாக இருந்தாலும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது!