குழந்தையின்மைக்குக் காரணமாகும் உணவுகள்!

திருமணம் ஆன தம்பதிகளில் 10 சதவிகிதம் பேர் குழந்தையின்மை பிரச்னையை எதிர்கொள்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குழந்தையின்மை பிரச்னைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆண்களுக்கு உடல் பருமன், மன அழுத்தம், குறைவான விந்தணு உற்பத்தி, ஹார்மோன் பிரச்னை என்று பல காரணங்கள் உள்ளன. அதே போல் பெண்களுக்கு உடல் பருமன், ஹார்மோன் சமச்சீரின்மை, சீரற்ற மாதவிலக்கு என்று பல பிரச்னை உள்ளது.
குழந்தைப் பேறு என்பது மிகவும் சிக்கலானது. ஒவ்வொரு நபருக்கும் காரணங்கள் வேறுபடும். நாம் உட்கொள்ளும் உணவு கூட குழந்தைப்பேறின்மைக்கு வழிவகுக்கும். நாம் எடுத்துக்கொள்ளும் நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கூட குழந்தைப்பேற்றுக்கு வழிகாட்டலாம்.
ரெட் மீட் எனப்படும் ஆடு, மாட்டிறைச்சியை அதிக அளவில் எடுத்துக்கொள்வது, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவது ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி, எண்ணிக்கை, இடப்பெயர்வு, தரம் என அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே, குழந்தையின்மையால் அவதியுறுபவர்கள் ரெட் மீட், பதப்படுத்தப்பட்ட - பக்குவமாக்கப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
அதிகம் பிராசஸ் செய்யப்பட்ட சர்க்கரை, மைதா போன்ற உணவுகளையும் தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட உணவுகள் கூட குழந்தைப் பேறு இன்மைக்கு வழிவகுக்கலாம். இதற்கு பதில் முழு தானியத்தால் தயாரிக்கப்பட்ட உணவுகள், காய்கறிகள், பழங்கள், நட்ஸ் போன்வற்றை எடுத்துக்கொள்ளலாம்.
மைதாவில் தயாரிக்கப்படும் பிரட், கேக், பேக்கரி பொருட்களைத் தவிர்ப்பது நல்லது. பீட்சா, பர்கர், ஹாட் டாக் போன்ற ஜங்க் உணவுகள் அதிக அளவில் எடுத்துக்கொள்வது இனப்பெருக்க மண்டல உறுப்புகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
சர்க்கரை, அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்கள், சோடா போன்றவை ஆண், பெண் என இருவருக்கும் இனப்பெருக்க மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கர்ப்பம் தரிக்கத் திட்டமிடும் தம்பதிகள் உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக மாற வேண்டும். டிரான்ஸ் ஃபேட் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
விலங்கு புரதத்தைக் குறைத்துக் கொண்டு, தாவிர புரதத்தை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எளிய கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு பதில், சிக்கலான கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கிளைசமிக் இன்டெஸ் மிகக் குறைவாக உள்ள உணவாக சாப்பிட வேண்டும்.
பெண்கள் ஃபோலிக் அமிலம், இரும்புச் சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.