பாத வெடிப்பு பிரச்னைக்கு வீட்டிலேயே எளிய தீர்வு!

 
Cracked Heels

பித்த வெடிப்பு என்று சாதாரணமாக வீடுகளில் கூறப்படும் பாதங்கள் வெடிப்பு என்பது பொதுவாக அனைவரிடமும் காணப்படும் பிரச்னை. இளம் வயதில் பாதங்கள் அழகாக பராமரிக்கும் பலரும், வயது அதிகரிக்க ஆரம்பித்ததும் பாதங்களை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். இதனால் பெரியவர்கள் மத்தியில் பாத வெடிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. அதற்காக பெரியவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்னை என்று கருதி விட வேண்டாம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, ஆண், பெண் என யாருக்கு வேண்டுமானாலும் பாத வெடிப்பு பிரச்னை ஏற்படலாம்.

பலரும் இதைப் பெரிய பிரச்னையாக கருதுவது இல்லை. சிலர் இதை அழகு சார்ந்த பிரச்னையாக மட்டுமே பார்க்கின்றனர். தொடர்ந்து பாத வெடிப்புக்குத் தீர்வு காணாமல் இருந்தால் பாத வெடிப்பு அதிகரித்து வெடிப்பு மிக ஆழமாக ஊடுருவித் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.

பாத வெடிப்பு பிரச்னைக்கு மிகக் குறைந்த விலையிலேயே களிம்பு மருந்துகள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி பயன்படுத்தலாம். அல்லது மாய்ஸ்ச்சரைசிங் கிரீம் தடவி பாதங்கள் உலராமல் தடுப்பதன் மூலம் பாத வெடிப்பை சரி செய்யலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பாதங்களை நன்கு கழுவி சுத்தம் செய்து, பருத்தி துணியால் பாதங்களை ஒத்தி எடுத்து உலர்த்தி, மருந்து அல்லது மாய்ஸ்ச்சரைசிங் களிம்பைத் தடவி வர வேண்டும்.

இப்படிச் செய்தும் பாதங்கள் வறண்டு வெடிப்பு அதிகரித்தது என்றால் பாத வெடிப்பு தீவிரமாக இருக்கிறது என்று அர்த்தம். இறந்த செல்கள் வெடிப்பின் ஆழத்தில் இருந்து வெடிப்பு பிரச்னையை சரி செய்ய விடாமல் தடுக்கின்றன என்று அர்த்தம். எனவே, வெதுவெதுப்பான நீரில் பாதங்களை நன்கு மூழ்க விட்டு 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும். பிறகு மென்மையாக வெடிப்பு பகுதியை தேய்த்து இறந்த செல்களை அகற்ற வேண்டும். அதிக அழுத்தம் கொடுத்துத் தேய்த்துவிட வேண்டாம். அப்படி செய்வது வெடிப்பில் புண்களை ஏற்படுத்திவிடும். அதன் பிறகு பாத வெடிப்புக்கான மருந்து அல்லது மாய்ஸ்ச்சரைசிங் கிரீம் தடவி வந்தால் போதும்.

எப்சம் உப்புடன் எசன்ஸியல் ஆயில் ஏதாவது ஒன்றைச் சேர்த்து பாத வெடிப்பு உள்ள பகுதியில் தடவி வர வேண்டும். இப்படிச் செய்வது பாதங்கள் ஆரோக்கியமாக இருக்கத் துணை செய்யும்.

கற்றாழை வீட்டிலிருந்தால் அதை வெட்டி, கற்றாழை ஜெல்லை பாதங்கள் மீது தடவி வந்தாலும் பாத வெடிப்பு விரைவில் சரியாகும். இரவில் தடவி காலையில் பாதங்களை கழுவினால் போதும்.

வீட்டில் இருக்கும் தேங்காய் எண்ணெய்யைத் தடவி வரலாம். இது மிகச்சிறந்த இயற்கை மாஸ்ச்சரைசராக செயல்பட்டு பாதத்தைக் காக்கும். மேலும் தேங்காய் எண்ணெய் மிகச் சிறந்த ஆன்டி இன்ஃபிளமேட்டரி, நுண்ணுயிரி எதிர்ப்புத் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இதனால் கிருமித் தொற்றை அகற்றி, புண்களை விரவாக ஆற்றி, அழகான பாதம் கிடைக்கத் துணை செய்யும்.