ஆழ்ந்த தூக்கம், நினைவாற்றலை அதிகரிக்க உதவும் அஸ்வகந்தா!

 
Ashwagandha

நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்தில் அஸ்வகந்தா பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுவாக அஸ்வகந்தாவை தாம்பத்தியம் தொடர்பான மூலிகையாகவே பலரும் பார்க்கின்றனர். இது குழந்தைப்பேறு உள்ளிட்ட விஷயங்களுக்கு உதவுகிறது... அதைத் தாண்டியும் பல நன்மைகள் அஸ்வகந்தாவில் இருந்து நமக்கு கிடைக்கின்றன.

தூக்கமின்மை பிரச்னையால் அவதியுறுபவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மூலிகை அஸ்வகந்தா. தொடர்ந்து அஸ்வகந்தாவை சாப்பிட்டு வந்தால் இரவில் ஆழ்ந்த, நிம்மதியான தூக்கம் கிடைக்கும். உடலுக்கு ஓய்வு அளித்து, புத்துணர்வுடன் வைக்க அஸ்வகந்தா உதவுகிறது. மேலும் மூளை செயல்திறன் மேம்படுத்துவதிலும் அஸ்வகந்தா துணைபுரிகிறது. இதன் காரணமாக நினைவாற்றல், புத்திசாலித்தனம் மேம்படும்.

அஸ்வகந்தா நரம்பு மண்டலம், நாளமில்லா சுரப்பிகள் மண்டலம், நோய் எதிர்ப்பு மண்டலங்கள் சீராக செயல்பட உதவி செய்கிறது. இதனால் உடலின் செயல்பாடுகள் மேம்படுகிறது. உடலும் மனமும் அமைதியடைகிறது. நம்முடைய உடலில் ஏற்படும் ஃப்ரீ ராடிக்கிள்ஸ் பாதிப்பை சரி செய்ய அஸ்வகந்தா உதவுகிறது.

அட்ரினல் சுரப்பியில் இருந்து கார்டிசோல் என்ற ஹார்மோன் வெளிப்படுகிறது. இந்த கார்டிசோல்தான் நம்முடைய மன அழுத்தத்துக்குக் காரணமாக இருக்கிறது. கார்டிசோல் அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால் பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படும். அட்ரினல் சுரப்பி மீது செயல்பட்டு கார்டிசோல் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் அஸ்வகந்தாவுக்கு உள்ளது. இதனால் மன அழுத்தம் குறைவதுடன், உடலின் சக்தி - வலிமை அதிகரிக்கும். மன அழுத்தம், சோர்வு போன்ற பிரச்னைகளுக்கு அஸ்வகந்தா முடிவுகட்டும்.

அஸ்வகந்தா ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் அளவை மேம்படுத்த உதவுகிறது. இதனால் விந்தணு உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கிறது.

அஸ்வகந்தா சருமத்தில் கொலாஜன் உற்பத்திக்குத் துணை செய்கிறது. இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கம் போன்ற பிரச்னைகள் நீங்குகின்றன. சருமம் இளமையாக இருக்க அஸ்வகந்தா துணை செய்கிறது.

முடி உதிர்வு, வழுக்கை, மிக இளம் வயதிலேயே முடி வெள்ளையாதல் போன்ற பிரச்னைகளை தீர்க்க அஸ்வகந்தா துணை செய்கிறது. முடி உதிர்வு பிரச்னை உள்ளவர்கள் தினமும் அஸ்வகந்தா பொடியை எடுத்து வந்தால் விரைவில் முடி உதிர்வு பிரச்னையில் இருந்து விடுபடலாம்!