சைவ உணவு பழக்கம் உள்ளவர்களுக்கு புற்று நோய் வாய்ப்பு குறைவாம்!

 
Vegetarians

உணவு என்பது தனி நபரின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டது. சிலருக்கு சைவ உணவுதான் முக்கியம். சிலருக்கு முட்டை, பால் கூட இல்லாத நனி சைவம் பிடிக்கும். பலருக்கோ மூன்று வேளையும் அசைவ உணவு இருந்தால்தான் முடியும். அசைவ உணவைக் காட்டிலும் சைவ உணவு உட்கொள்வது அதிக ஆரோக்கியமானது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

தற்போது புதிய ஆய்வு ஒன்று அசைவ உணவை சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என்று கண்டறிந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் சைவ உணவு மற்றும் அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கான உடல் நலக் குறைவுகள் பற்றி ஆய்வு செய்தனர். இதில் அசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 14 சதவிகிதம் குறைவாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

இங்கிலாந்தில் 4.7 லட்சம் பேரிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு எப்படி என்று ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக அசைவ உணவு சாப்பிட்டால் புற்றுநோய் வரும் என்ற முடிவுக்கு தாங்கள் வரவில்லை என்று ஆய்வை மேற்கொண்ட ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது. ஒருவரின் பழக்க வழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கம், உடல் பருமன், உடலில் உள்ள கொழுப்பு அளவு பொருத்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மாறும் என்று ஆய்வை மேற்கொண்ட ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பாப்புலேஷன் ஹெல்த் கேன்சர் எபிடமாலஜி துறையைச் சேர்ந்த ஆய்வுக் குழுவின் தலைவர் கோடி வாட்லிங் தெரிவித்துள்ளார்.

வாரத்துக்கு ஐந்து முறைக்கும் மேல் ரெட் மீட், இறைச்சி உள்ளிட்ட மீன் தவிர்த்த இதர அசைவ உணவு எடுத்துக்கொள்பவர்களுக்கு குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 9 சதவிகிதம் அதிகம். சைவ உணவு உட்கொள்ளும் பெண்களுக்கு அசைவ உணவு உட்கொள்ளும் பெண்களைக் காட்டிலும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 18 சதவிகிதம் குறைவு. சைவ உணவு உட்கொள்ளும் ஆண்களுக்கு பிராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 31 சதவிகிதம் குறைவாக உள்ளது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசைவ உணவு கெடுதல் என்று கூறவில்லை. அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. அதுவும் அதிக அளவில் எண்ணெய்யில் பொரிக்கப்பட்டது என்று இல்லாமல் வேக வைத்த இறைச்சியை அளவாக சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்னையும் இருக்காது!