மனிதன் உயிரிழக்கும் போது கடைசி விநாடிகளில் என்ன நடக்கும் தெரியுமா?

பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒரு நாள் உயிரிழக்கும். ஆனால் அதை நினைத்து கவலை கொள்ளும் இதயங்கள் அதிகம். நம்முடைய இறப்பு எப்போது, எப்படி இருக்கும்... இறக்கும் போது என்ன நடக்கும்... இறந்த பிறகு என்ன ஆகும் என்று பல கேள்விகள் நம்முடைய மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதைக் கண்டறிய தொடர்ந்து பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் தற்செயலாக, நாம் உயிரிழக்கும் கடைசி சில விநாடிகள் நம் கண் முன் நம்முடைய வாழ்க்கை தொடர்பான ஃபிளாஷ்பேக் வந்து செல்லும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஃபிரான்டியர்ஸ் இன் ஏஜிங் நியூரோ சயின்ஸ் என்ற மருத்துவ இதழில் நாம் உயிரிழக்கும் போது கடைசி 30 விநாடிகள் நம்முடைய வாழ்க்கை தொடர்பான ஃபிளாஷ் வந்து செல்வதாக ஆய்வுக் கட்டுரை வெளியாகி உள்ளது.
ஆய்வாளர்கள் வலிப்பு நோயால் அவதியுற்று வந்த, 87 வயதான நோயாளி ஒருவரின் மூளை அலைவரிசைகளை ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அவரது மூளை செயல்பாடுகளை ஆய்வு செய்துகொண்டிருந்த போது, அந்த நோயாளிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது அவரது மூளையில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருவிகள் பதிவு செய்தன. மூளையின் நினைவுகள் பதிவாகும் பகுதி மற்றும் பதிவான தகவலை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் பகுதியில் இயல்புக்கு மீறிய செயல்பாடு நடந்ததை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதன் மூலம் கடைசி விநாடிகள் நம்முடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் நம்முடைய கண்களுக்கு முன் கொண்டு வருவது நடந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுக் கட்டுரையை எழுதியவர்களுள் ஒருவரான டாக்டர் அஜ்மல் ஜெமீர் கூறுகையில், "மாரடைப்பு ஏற்பட்டு நோயாளியின் உயிர் பிரிந்த நேரத்தில், அதாவது இதயத் துடிப்பு நின்று, மூளைக்கு ரத்தம் செல்வது தடைபட்ட நிலையில் 30 விநாடிகளுக்கு மூளையில் குறிப்பிட்ட பகுதியில் அலைவரிசை அதிகமாக இருந்தது. நாம் அதிகமாகக் கூர்ந்து கவனிக்கும் போது, கனவு காணும் போது, பழையவற்றை நினைவுகூரும் போது ஏற்படும் அதே மிக அதிகபட்ச செயல்பாடுகள் மூளையில் நடந்தன. இதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் மூளை இறப்பதற்கு முன்பான அந்த 30 விநாடிகளில் நம் மனக் கண்களுக்கு முன்பு வந்து சென்றிருக்கலாம்" என்றார்.