தாம்பத்திய வாழ்க்கைக்குக் கைகொடுக்கும் உணவுகள்!

உடலின் ஒவ்வொரு உறுப்பின் ஆரோக்கியமான இயக்கத்துக்கும் சில உணவுகளை பரிந்துரைப்பது வழக்கம். உதாரணத்துக்கு கண்கள் நன்றாகச் செயல்பட கேரட் எடுத்துக்கொள்ள பரிந்துரைப்பார்கள். மூளைக்கு வால்நட் பரிந்துரைக்கப்படுகிறது. அது போன்று இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாடு மற்றும் தாம்பத்திய வாழ்க்கைக்கு கைகொடுக்கும் சில உணவுகள் பற்றி பார்ப்போம்.
டெல்லியைச் சேர்ந்த செக்சாலஜி மருத்துவர் டாக்டர் விஜய் சிங்கால் இது குறித்து கூறுகையில், எந்த ஒரு ஆரோக்கியமான உணவும் இனப்பெருக்க மண்டலத்துக்கு ஏற்றதுதான். இருப்பினும் ஸ்டிராபெர்ரி, வால்நட், அவகேடோ, தர்பூசணி, பாதாம் போன்றவை தாம்பத்திய வாழ்க்கையை இனிக்கச் செய்யும். ஆல்கஹால் தாம்பத்திய வாழ்க்கைக்கு வேட்டு வைப்பதுடன் செக்ஸ் ஆர்வத்தைக் குறைத்துவிடும்.
ஆண்களுக்கு விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்க வால்நட் உதவுகிறது. விந்தணு எண்ணிக்கை குறைவு, இடப்பெயர்வு பிரச்னை, தரமற்ற விந்தணுக்கள் உற்பத்தி போன்றவற்றை வால்நட் சரி செய்ய உதவும். குழந்தைப் பேற்றுக்கான வாய்ப்பை வால்நட் அதிகரிக்கச் செய்கிறது.
ஸ்டிராபெர்ரியில் துத்தநாகம் உள்ளது. இது ஆண், பெண் என இருவரின் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கும் உதவுகிறது. உடலில் போதுமான அளவு துத்தநாகம் இருப்பது நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமின்றி, செக்ஸ் ஆர்வத்தையும் அதிகரிக்க உதவும். ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் அளவை கட்டுக்குள் வைக்கும் திறன் துத்தநாகத்துக்கு உள்ளது. துத்தநாகம் அளவு குறையும் போது டெஸ்டோஸ்டீரான் அளவு குறைந்து, தாம்பத்தியத்தில் ஆர்வக் குறைவு ஏற்படுகிறது.
அவகேடோவில் வைட்டமின் பி6 மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது. இதுவும் செக்ஸ் ஆர்வத்துக்கு அவசியம். ஃபோலிக் அமிலம் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. வைட்டமின் பி6 ஹார்மோன்கள் சீரான அளவில் இருக்க துணை செய்கிறது.
தர்பூசணி பழம் ஆண்களுக்கு விரைப்புத் தன்மை மற்றும் நீண்ட தாம்பத்தியத்துக்கு துணை செய்கிறது. தர்பூசணியில் சிட்ரிலின் மற்றும் ஆர்ஜினின் என்ற ரசாயனங்கள் உள்ளன. ஆர்ஜினின் ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. தாம்பத்திய உறவின் போது ஆண் உறுப்புக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்க இது துணை செய்கிறது. இவை மட்டுமின்றி பாதாம், முட்டை, காபி, சாக்லெட் உள்ளிட்ட மேலும் பல உணவுப் பொருட்கள் செஸ் வாழ்க்கை மேம்படத் துணை செய்கின்றன" என்றார்.