கொள்ளு சாப்பிட்டால் உடல் எடை மட்டும்தான் குறையுமா?
`கொழுத்தவனுக்கு கொள்ளு; இளைத்தவனுக்கு எள்ளு’ என்று பழமொழி சொல்லிக் கேட்டிருக்கிறோம். உடல் எடையைக் குறைக்க மட்டுமல்ல ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது கொள்ளு. நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்தில் கொள்ளு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
கொள்ளில் அதிக அளவு புரதச்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இது தவிர வைட்டமின் சி உள்ளிட்ட ஏராளமான அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைந்துள்ளது.
கொள்ளில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து என்ற இரண்டு விஷயங்கள் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொள்ளு பயிரைக் கொண்டு நடத்தப்பட்ட 28 ஆய்வுகளில் இது உடல் எடைக் குறைக்க உதவுகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எலிகளுக்கு அதிக கொழுப்புச்சத்து உள்ள உணவுடன் கொள்ளும் கொடுத்து ஆய்வு செய்துள்ளனர். அதிக கொழுப்பு உணவை உட்கொண்டாலும் அந்த எலிகள் உடல் எடை குறைந்திருந்தன. இதன் மூலம் கொள்ளு உடல் எடையைக் குறைப்பதுடன், உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கவும் செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கொள்ளு உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கும். இதன் காரணமாக இதய நோய் வருவதற்கான வாய்ப்பு பல மடங்கு குறைகிறது. ஆய்வு ஒன்றில் ஐந்து வாரங்கள் தொடர்ந்து கொள்ளு எடுத்துக்கொண்டவர்களுக்கு எல்.டி.எல் என்ற கெட்ட கொழுப்பு மற்றும் டிரைகிளரைடு அளவு குறைந்திருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த இரண்டும்தான் இதய நோய் வருவதற்கு காரணமாக உள்ளன.
சளி, காய்ச்சல் நேரத்தில் கொள்ளு இடித்து வேக வைத்து அந்த தண்ணீரை அருந்தினால் போதும். சளி, காய்ச்சல் விலகும். சுவாசப் பிரச்னை சீராகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கொள்ளு சிறுநீர்ப் பெருக்கியாகவும் செயல்படுகிறது. சிறுநீரகத்தில் சிறிய அளவுக் கல் இருப்பவர்கள் கொள்ளு தண்ணீர் அருந்தலாம். கால்சியம் ஆக்சலேட் கற்களை இது கரைத்து வெளியேற்றிவிடும்.
ஆண்மையைப் பெருக்கம் மருந்தாகவும் கொள்ளு விளங்குகிறது. இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கின்றன.