ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிப்பு..

 
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை

ஆண்களுக்கான வாய்வழி கருத்தடை மாத்திரையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு கருத்தடை மாத்திரைகளுக்கு உண்டு. ஆனால் கருத்தடை மாத்திரை என்பது பெண்களுக்கு மட்டுமே என்கிற நிலையே இதுவரை இருந்து வருகிறது.  ஒரு பக்கம் கருத்தரிப்பினாலோ அல்லது கருத்தடை மாத்திரைகளினால் ஏற்பட்டும் பக்க விளைவுகளோ பெண்களே அனுபவிக்கும் நிலை உள்ளது.  குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை என்று எடுத்துக்கொண்டாலும் பெண்களுக்குத்தான் அதிகம் செய்யப்படுகிறது.   ஆனால் அறிவியல் வளர்ச்சி பல தலைகீழான மாற்றங்களையும், ஆச்சரியங்களையும்  ஏற்படுத்தி வருகின்றன.

கருத்தடை மாத்திரை

அந்தவகையில் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக  நேச்சர் கம்யூனிகேஷன் இதழ்  அறிவித்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கும் மேலாக  ஆண்கள் கருத்தடைக்காக ஆணுறைகளை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதனைமாற்ற ‘ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள்’குறித்த ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. 

பொதுவாகவே கருத்தடை மாத்திரைகள் என்றால் , அதன் பக்க விளைவுகள் குறித்த ஒருவித  அச்சம் இருக்கும். ஆனால் இந்த மாத்திரைகள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும், 99% பயனளிக்கக்கூடியது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  ஏனெனில் இவை ஹார்மோன் அல்லாத கருத்தடை மாத்திரைகள் என்று கூறப்படுகிறது.  

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை
ஆண் எலிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில்,  இரண்டரை மணி நேரம் விந்தணுக்களை செயலிழக்கச் செய்ததாகவும்,  3 மணி நேரத்தில் சில விந்தணுக்கள் மீண்டும் இயக்கத்தை பெற்றதாகவும், 24 மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட அனைத்து விந்தணுக்களும் இயல்பான இயக்கத்தை பெற்றதாகவும் கூறுகின்றனர். இது எலிகளின் இனச்சேர்க்கையை பாதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

மற்ற கருத்தடை மாத்திரைகளுடன்  ஒப்பிடுகையில், ‘male Pill' எனப்படும்  இந்த மருந்து உட்கொண்ட 30 முதல் 60 நிமிடங்களுக்குள் வேலை செய்யத் தொடங்குகிறது. மற்ற மருந்துகள் குறைந்தது வேலை செய்யவும், மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவும்  ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்கின்றனர்.  ஆனால் இது சில மணி நேரங்களில் பலன் கொடுக்கும் என்கிறார்கள்.. கருவுறுவதை கட்டுப்படுத்தும் மாத்திரைகளுக்கு பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதால், இந்த கருத்தடை மாத்திரை தொடர்பான மனிதர்கள் மீதான மருத்துவ ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.