இளம் பெண்களுக்கும் மாரடைப்பு வரலாம்… தவிர்க்க என்ன வழி?

 
heart attacks

சமீபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ரேடியோ ஜாக்கி ரட்சனா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது வெறும் 39தான். பொதுவாக மெனோபாசுக்குப் பிறகுதான் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். தற்போது இளம் வயது பெண்களுக்கு கூட மாரடைப்பு வருது அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் இளம் பெண்களுக்கு மாரடைப்பு வருவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு தவறான வாழ்க்கை முறை, உணவு, மன அழுத்தம் உள்ளிட்டவை முக்கிய காரணமாக இருக்கின்றன. அமெரிக்காவில் இளம் பெண்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு எவ்வளவு உள்ளதோ அதே போன்ற அளவுக்கு இந்தியாவிலும் அதிகரித்துள்ளது.

5 - 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மிக இளம் வயதில் மாரடைப்பு ஏற்படும் ஆண் - பெண் விகிதம் என்பது 70:30 என்ற அளவிலிருந்தது. பெண்களுக்கு 30க்குப் பிறகு 50களின் தொடக்கத்தில் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு ஆரம்பிக்கிறது. பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், சோர்வு போன்ற காரணங்களுக்காக முதலில் மருத்துவமனைக்கு வருவார்கள். ஆனால் தற்போது நேரடியாக மாரடைப்பு அல்லது இதய செயலிழப்பு காரணமாக மருத்துவ மனைக்கு வரும் பெண்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது என்று பெங்களூருவைச் சேர்ந்த இதய செயலிழப்பு சிறப்பு மருத்துவ நிபுணர் திவ்யா ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு தற்போது அதிக அளவில் இதய நோய்கள் வருவதற்கு உடல் உழைப்பு குறைந்தது, அதீத மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை, உடல் பருமன், அலுவலக வேலையையும் செய்து கொண்டு வீட்டு வேலையையும் செய்ய வேண்டிய சூழல் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.

பொதுவாக ஆண்களுக்கு ஏதேனும் உடல் நலக் குறைபாடு, அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவார்கள். ஆனால், பெண்கள் அதை அலட்சியப்படுத்திவிட்டு தங்கள் வழக்கமான வேலைகளில் ஈடுபடுவார்கள். தங்களின் பொறுப்புணர்வு, கடமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள், உடல் நலம் பற்றி மறந்துவிடுவார்கள். இதுவே முற்றிய நிலையில் பல பெண்கள் மருத்துவமனைக்கு வர காரணமாக உள்ளது.

பொதுவாக 45க்குப் பிறகு மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு நிற்கும் காலம் வரும். தற்போது 30- 35 வயதிலேயே இது வந்துவிடுகிறது. முன்பு எல்லாம் ஆண்களுக்குத்தான் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பெண்களுக்கு 55 - 60க்குப் பிறகுதான் இதய நோய் வரும் என்று இருந்தது. ஆனால் இளம் வயதிலேயே மெனோபாஸ் வந்துவிடுவதால், பெண்களுக்கு இருந்த ஹார்மோன் பாதுகாப்பு மறைந்துவிடுகிறது. இதனால் இளம் வயதிலேயே மாரடைப்பு வருகிறது. இதய நோயை ஆரம்ப நிலையில் கண்டறிய, மாரடைப்பைத் தவிர்க்க 35ஐக் கடந்துவிட்டால் 2 ஆண்டுக்கு ஒரு முறையாவது ஈசிஜி, எக்கோ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 40ஐக் கடந்துவிட்டாலே பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஈசிஜி, எக்கோ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.