• July
    21
    Sunday

Main Area

Mainபாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு; நீட் தேர்வு ரத்து குறித்த அறிவிப்பு இல்லை-முழு விவரம்!

பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
Loading...

புதுதில்லி: ராமர் கோயில் காட்டப்படும், ஐயப்பன் கோயில் பாரம்பரியம் பாதுகாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடங்கிய நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இதற்கான வேட்பாளர்களை அறிவித்தும், தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான, 48 பக்கங்கள் கொண்ட பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 12 பேர் அடங்கிய குழு இந்த தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. இதில் 75 வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. "சங்கல்ப் பத்ரா" (உறுதிமொழி பத்திரம்) என்ற பெயரிலான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா, அருண்ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

rajnath singh

அப்போது பேசிய ராஜ்நாத் சிங், ஒவ்வொரு துறையிலும் குழு அமைத்து, விவாதிக்கப்பட்டு தேர்தல் அறிக்கை உருவானது. பாஜக தேர்தல் அறிக்கை 130 கோடி மக்களுக்கு திருப்தியளிக்கும். புதிய பாரதத்தை நோக்கி, பாஜகவின் தேர்தல் அறிக்கை உள்ளது. மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதில் மோடி அரசு சிறப்பாக செயல்படுகிறது. மோடி தலைமையிலான அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது

பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

** 60 வயதிற்கு மேலான சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

**வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

**கிசான் சம்மன் திட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித் தொகை தரப்படும்

**விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்ட் வழங்கப்படும். கிராமப்புற வளர்ச்சிக்காக சுமார் ரூ.25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

**அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.

**நாடு முழுவதும் 75புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.

**தீவிரவாதத்திற்கு எதிராக சமரசம் இல்லாமல் செயல்படுவோம். அதிக தொழில் நுட்ப வசதிகள் கொண்ட புதிய ஆயுதங்கள் கொண்டு, தீவிரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

pmmodi

**2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.

**கால சூழல்களுக்கு ஏற்றவகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும்.

**தூய்மை இந்தியா திட்டத்தின் படி 100 சதவீதம் தூய்மை இந்தியா உருவாக்கப்படும்.

**நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசமைப்பு சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்.

**மாநில அரசுடன் முறையான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை எளிமைப்படுத்தப்படும்.

**மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கனவுத் திட்டமான நதிகளை இணைக்கும் திட்டம் அடுத்து வரும் 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும்.

**மாநில காவல் துறையை நவீன மயமாக்க நிதியுதவி வழங்கப்படும்.

**நதிகளை இணைப்பதற்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்.

**நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 2022-ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கப்படும்

**2024-க்குள் நாட்டில் மேலும் 200 கேந்திர வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் உருவாக்கப்படும்.

**சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கைகள், சடங்குகளை உச்ச நீதிமன்றம் முன் எடுத்துரைத்து அவைகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

**அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். மத நம்பிக்கையை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

**இஸ்லாமிய பெண்களின் உரிமையை நிலைநாட்ட முத்தலாக் தடை சட்டம் நிறைவேற்றப்படும்.

**ஒரு ரூபாயில் சானிட்டரி நாப்கின் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

**அடுத்த 5 ஆண்டுகளுக்குள் நாட்டில் செயல்பட்டு வரும் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

**நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

**2024-ஆம் ஆண்டுக்குள் அனைத்து  வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்

**அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்.

**2022-ஆம் ஆண்டுக்குள் சாத்தியமான இடங்களில் அகல ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

**நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த கருத்தொற்றுமை ஏற்படுத்தப்படும்.

**கருப்புப்பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் தொடரும்.

**நாட்டின் உள்கடட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கப்படும். கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.25 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்துவோம் என அதிமுக கூறியிருந்த நிலையில், பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் அதுகுறித்து ஏதும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

ஜெயலலிதாவின் கடைசி 75 நாட்கள்; சர்ச்சையை கிளப்பும் சசி லலிதா திரைப்படம்?!

2018 TopTamilNews. All rights reserved.