• June
    25
    Tuesday

Main Area

Mainஆண் குழந்தை கேட்டு நடுராத்திரியில் மருமகளுக்கு டார்ச்சர் தந்த குடும்பம்

harrasement
harrasement
Loading...

பிறந்ததில் இருந்து பதின் வயதின் இறுதி காலகட்டம் வரை நான் துன்பம் என்றால் என்ன என்று அறியாமல், என் கனவுகள் மற்றும் ஆசைகளை மட்டுமே கைகளிலும், மனதிலும் ஏந்தி வளர்ந்து வந்த பெண்.

அப்போது எனக்கு 17 வயதிருக்கும். பள்ளி இறுதியாண்டு படித்து வந்த காலக்கட்டம். என் தந்தை செய்து வந்த தொழில் பெருத்த நஷ்டம் அடைந்தது. அந்த எதிர்பாராத நஷ்டம் என் தாய், தந்தையை மிகுந்த மன வேதனை அடைய செய்தது.

என் மீது அன்பும், அக்கறையும் மிகுதியாக காட்டிய அவர்கள் அப்படி உடைந்து போய் உட்கார்ந்திருப்பதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. பள்ளி இறுதியாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதால், எனக்கு நல்ல கல்லூரியில் ஸ்காலர்ஷிப் உடன் சீட் கிடைத்தது. ஆயினும், புத்தகம், லேப் ஃபீஸ் என்று சில கட்டணம் செலுத்துவதற்கு கூட முடியாத நிலையில் இருந்தோம்.

ஐம்பது வயதை கடந்த என் பெற்றோரை மேலும், மன வேதனையுடன் வாழ்ந்து வந்த அவர்களிடம் இதுகுறித்து பேச எனக்கு விருப்பமில்லை. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பார்ட் டைம் வேலை!

நானாக ஒரு பார்ட் டைம் வேலையில் சேர்ந்து எனக்கான படிப்பு செலவு மட்டுமின்றி, வீட்டு செலவுக்கும் கொஞ்சம் உதவினேன். எப்படியோ, நான்காண்டுகள் பட்ட சிரமத்திற்கு விடிவு காலமாக மல்டி நேஷனல் கம்பெனி ஒன்றில் நல்ல வேலை கிடைத்தது.

அப்பாவின் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு பிறகு, நாங்கள் ஒரு இயல்பான வாழ்க்கை நடத்த ஏழாண்டுகள் எடுத்துக் கொண்டது. நான் சிறு வயதில் இருந்தே ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டான பெண்ணாக தான் வளர்ந்தேன். இதனால் தான் காதலும் கை கூடியது.

நான் வேலை செய்து வந்த இடத்தில், உடன் பணிபுரியும் நபர் மீது காதல் வயப்பட்டேன். அதை மூடி மறைத்து, கையை பிசைந்துக் கொண்டிருக்காமல், நேரடியாக அவரிடமே சென்று என் காதலை வெளிப்படுத்தினேன். ஆரம்பத்தில் அவர் என் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. நாம் ஏன் நண்பர்களாக மட்டும் இருக்க கூடாது என்று தான் பதில் அளித்தார்.

பிறகு, சில வாரங்கள் கழித்து, அவராக என் காதலை ஏற்றுக் கொண்டார். இதுநாள் வரை நான் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு முடிவு காலம் வந்துவிட்டது. மனதுக்கு பிடித்தவனுடன் என் வாழ்க்கையை இனி வாழப் போகிறேன் என்று சந்தோசத்தில் சிறகடித்து பறக்க ஆரம்பித்தேன். என்னவர் காதலை ஏற்றுக் கொண்ட உடனே, வீட்டில் பெற்றோரிடம் பேசினோம். திருமண தேதி முதற்கொண்டு முடிவாகிவிட்டது. ஆனால், நான் நினைத்தது எல்லாம் தவறு என, திருமணத்துக்குப் பின் உணர்ந்தேன்.

என் கணவர் வீட்டில் கூட்டுக் குடும்பம். அவரது அம்மாவிற்கு இரண்டு மகள்கள், இரண்டு மகன்கள். என் கணவர் தான் இளையவர். திருமணமான மறுநாளில் இருந்தே, என்னை டார்ச்சர் செய்ய ஆரம்பித்தார் என் மாமியார்.

முதல் மாதம் நாட்கள் தள்ளிப்போகவில்லை. உடனே, நீ எல்லாம் குழந்தை பெற்றுக் கொள்ள லாயக்கு இல்லை. உனக்கு குழந்தை பிறக்காது என்று திட்ட ஆரம்பித்தார். மேலும், நாங்கள் நினைத்தது போல கல்யாணம் பிரம்மாண்டமாக இல்லை. அதற்கு உன் பெற்றோர் தான் காரணம் என்று என் அம்மா, அப்பாவையும் திட்டினார். எல்லாவற்றுக்கும் மேலாக, என் அம்மா இன்னும் ஆறே மாதத்தில் இறந்துவிடுவார் என்றும் கூறி என்னை வேதனைக்கு உட்படுத்தினார்.

எப்படி ஒரு பெண்ணால் இந்த அளவிற்கு வெறுப்பை கொட்ட முடியும். ஒருவரின் இறப்பு அப்படி என்னவொரு சந்தோசத்தை இவருக்கு அளித்திட போகிறது? என் கணவர் மட்டுமே எனக்கு உறுதுணையாக இருந்தார். அந்த ஒரே ஒரு காரணத்தால் தான் நான் அந்த வீட்டில் வாழ முடிந்தது. காரணம்! என்னை டார்ச்சர் செய்வது போலவே தான், மூத்த மருமகளையும் டார்ச்சர் செய்தார் என்று என் கணவர் கூறினார். ஒருவேளை, என் மாமியாரின் குணமே இப்படி தான் போல என்று பிறகு நான் அவர் பேசுவதை எல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் விட்டுவிட்டேன்.

ஒருவேளையாக திருமணமான இரண்டாவது மாதத்தில் நான் கருவுற்றேன். அதை எண்ணியும் என் மாமியார் சந்தோஷம் அடையவில்லை. நீ ஆண் குழந்தை மட்டும் தான் பெற்றெடுக்க வேண்டும். பெண் பிள்ளை எனக்கு வேண்டாம் என்று கூறினார். அவர் ஒரு பெண் என்பதை தாண்டி, அவரும் இரண்டு பெண் குழந்தைகள் பெற்றிருக்கிறார். அவர் உடன் பிறந்தவர்களே ஐந்து சகோதரிகள். இப்படி இருக்க, ஏன் இவர் இப்படி ஆண் குழந்தை தான் வேண்டும் என்று அடம் பிடிக்க வேண்டும்?

கர்ப்பமான பெண்களிடம் நல்லதை பேச வேண்டும் என்பார்கள். என்னிடம் ஒருநாள் கூட என் மாமியார் நல்லவிதமாக பேசியதே இல்லை. உனக்கு சர்க்கரை நோய் வரும், சிசேரியன் தான் நடக்கும். உன்னால் வலி தாங்க முடியாது என்று எதிர்மறையாகவே பேசினார்.

நான் வேலைக்கு சென்று வந்துக் கொண்டிருந்ததாலும், கர்ப்பமான பிறகு முழு வேலைகளும் அவரே செய்ய வேண்டி இருந்ததாலும், வீட்டுக்கு ஒரு பணிப்பெண்ணை அமர்த்த கூறினார். சரி! என்று செய்தோம். அந்த பெண்ணுக்கு ஊதியம் கொடுத்ததும் நானே.

எப்படியோ மாமியார் தொல்லை மட்டும் தானே என்று எண்ணி இருந்த காலக்கட்டத்தில் தான், என் கணவரின் அண்ணனும் என்னை கொடுமை செய்ய துவங்கினார். அவர் சொல்வதை தான் கேட்க வேண்டும், செய்ய வேண்டும். அண்ணனும், மாமியாரும் செய்யும் கொடுமைகளை என் கணவரிடம் கூறக் கூடாது என்று எச்சரித்தனர்.

என் கணவர் வேலை விஷயமாக மாதம் ஒரு முறையாவது வெளியூர் சென்று வர வேண்டிய சூழல் இருந்தது. அந்த காலங்களில் என்னை என் அம்மா வீட்டில் விட்டு சென்றுவிடுவார். அதனால் நான் தப்பித்தேன். ஒருநாள், நான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, நீ ஆண் குழந்தை பெற்றால் மட்டும் தான் திரும்ப வீட்டுக்கு வர வேண்டும். பெண் குழந்தை பிறந்தால், வரவே கூடாது என்று இரவில் வீட்டை விட்டு விரட்டினார்கள்.

எனக்கும் சுய மரியாதை இருக்கிறது. அதன் பிறகு நான் அந்த வீட்டுக்கே போகவில்லை. ஊரில் இருந்து வந்த என் கணவர், எனக்கும், என் பெற்றோருக்கும் ஆதரவாக இருந்தார். எனக்கு அழகான தேவதை பிறந்தாள். சுகப்பிரசவம் தான் நடந்தது. என் மாமியார் கணித்த எதுவும் நடக்கவில்லை. நானும், அந்த வீட்டுக்கு திரும்ப போகவில்லை.

இப்போது நான் வேலைக்கு சென்று வருகிறேன். என் அம்மா தான் என் குழந்தையை பார்த்துக் கொள்கிறார். என் மகள் இந்த உலகின் சிறந்த பெண்மணியின் அரவணைப்பில் வளர்கிறாள் என்ற நிம்மதியுடன் வேலைக்கு சென்று வருகிறேன்.

இன்னும் எத்தனை காலத்திற்கு தான் பெண் பிள்ளை, ஆண் பிள்ளை பிரச்சனைகள் தொடருமோ... தெரியவில்லை.

2018 TopTamilNews. All rights reserved.